தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நாளையும் நாளை மறுநாளும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான குழு இன்று இரவு சென்னை வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இக்குழுவினர் சென்னையில் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் ஆலோசனை நடத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் 20-க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய குழு ஆலோசனை நடத்துகிறது.
நாளை மறுநாள் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக மாவட்ட ஆட்சியர்களுடனும் தேர்தல் ஆணைய குழு ஆலோசனை மேற்கொள்கிறது. அத்துடன் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனும் தேர்தல் ஆணைய குழு ஆலோசனை நடத்துகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் விரைவில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பு.
