வாக்குத் திருட்டு: தேர்தல் ஆணையமும் ஊடகங்கள் காட்டும் பாராமுகமும்

Published On:

| By Minnambalam Desk

அமிதாப் துபே

ஜனநாயகத்தின் பாதுகாவலரான இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் பல கோடி போலி வாக்காளர்கள் இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதம், செயலற்ற எதிர்ப்பு, அமைதியான ஆதிக்கம் (passive aggressiveness), சினிமா பாணியிலான வசனங்கள் ஆகியவற்றோடு நின்று விடுகிறது. நடவடிக்கை ஏதும் இல்லை. 

ADVERTISEMENT

இந்திய ஊடகத்தின் சில பிரிவுகளும் அதைப் பின்பற்றுகின்றன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தது போல, “வாக்குத் திருட்டு” குற்றச்சாட்டுகள் வெற்று ஆரவாரம்தான் என்று மறைமுகமாக உணர்த்தும் வகையில் தலைப்புகளைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், ஹரியானா மாநிலம் ஹோடல் மாவட்டத்தில் உள்ள போலி வாக்காளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒவ்வொரு செய்திக் கட்டுரையும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் கட்டுரைகள் உட்பட, ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ள அப்பட்டமான முறைகேடுகள் குறித்த காங்கிரஸின் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளன.

நவம்பர் 5 அன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்காளர்கள் — அதாவது ஒவ்வொரு எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் — சந்தேகத்திற்குரியவர்கள் என்பதைக் காட்டினார். இந்தப் பெயர்கள் (1) பல பூத்கள், தொகுதிகள், மாநிலங்களில்கூட நகல் எடுக்கப்பட்டுள்ளன, அல்லது (2) தெளிவாகச் சொல்லாத முகவரிகள் கொண்டிருந்தன, அல்லது (3) ஒரு முகவரியில் நம்ப முடியாத அளவுக்கு மொத்த வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது அம்சத்தின் எடுத்துக்காட்டாக, ஹரியானாவில் உள்ள மூன்று வீடுகளை ராகுல் குறிப்பிட்டார்; அங்கு முறையே 66,501,108 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பல ஊடகங்கள் உடனடியாக நிருபர்களை ஹரியானாவுக்கு அனுப்பிச் சிலவற்றைச் சரிபார்த்தன. எதிர்பார்த்தபடியே பெரும் எண்ணிக்கையிலான முறைகேடுகளைக் கண்டறிந்தன.

ஊடகங்களின் எதிர்வினை

ADVERTISEMENT

நவம்பர் 6 தேதியிட்ட முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை, ஹோடல் மாவட்டத்தில் உள்ள இரண்டு முகவரிகள் — வீட்டு எண் 150 (66 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்), வீட்டு எண் 265 (501 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்) — உண்மையில் பல வீடுகளையும் குடும்பங்களையும் கொண்ட பெரிய இடங்கள் என்று கூறி, காங்கிரஸ் தவறு செய்துள்ளதாக மறைமுகமாக உணர்த்தியது. நவம்பர் 7 தேதியிட்ட இரண்டாவது கட்டுரை, வாக்காளர் பட்டியலில் 223 பெயர்களுக்கு அருகில் புகைப்படம் இருக்கும் சரண்ஜீத் கவுர், தான் ஒருமுறை மட்டுமே வாக்களித்ததாகக் கூறியதைக் கண்டறிந்து, நகல் வாக்காளர்கள் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துடன் முரண்பட முயன்றது. , அவரது புகைப்படத்துடன் தொடர்புடைய வாக்காளர்களில் குறைந்தது 17 பேர் இதை அறிந்திருந்தனர், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இந்த சிக்கலைச் சுட்டிக்காட்டியிருந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறியது.

இதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன.

முதலாவதாக, மற்ற செய்தி அறிக்கைகள் இந்த உறுதியான கூற்றுகளுக்கு முரண்படுகின்றன. தைனிக் பாஸ்கர் நிருபர், வீட்டு எண் 265இல் ஏழு பேர் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்தார். அதன் உரிமையாளர் முன்னாள் பாஜக கவுன்சிலர். தனது குடும்ப, உறவினர் வட்டத்தில் 80 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறினார். இந்தக் குடும்ப உறுப்பினர்கள், தி பிரிண்டிடம், 2016க்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் வெளியாட்களின் பெயர்கள் இந்த முகவரியில் சேர்க்கத் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதன் உண்மையை அறிய ஒரு முறையான விசாரணை தேவை என்பது தெளிவாகிறது. ஆயினும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைக்கான எந்த அறிகுறியும் காட்டவில்லை.

இரண்டாவதாக, சரண்ஜீத் கவுர் தேர்தல்களைக் கையாள்கிறார் என்று காங்கிரஸ் கூறவில்லை. தெளிவான கேள்வி என்னவென்றால்: வாக்காளர் பட்டியல் மற்றும் அவர்களின் அடையாள அட்டையில் உள்ள புகைப்படங்கள் பொருந்தாதபோது 5,21,619 பேர் எப்படி வாக்களித்தனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தானே உறுதிப்படுத்தியுள்ளது? அடுத்த கேள்வி, இவர்களில் எத்தனை பேர் உண்மையான வாக்காளர்கள்? இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பட்டியல்களில் உள்ள 25,41,144 சந்தேகத்திற்குரிய பதிவுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஹரியானா மாறியது என்பதை நினைவுபடுதிக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, அனைத்துச் செய்திக் கட்டுரைகளும், “உதவி வாக்காளர் பதிவு அதிகாரி 10க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள குடும்பங்களைத் கள ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறும் வாக்காளர் பட்டியல் கையேட்டின் விதி 11.2.4(a), விதி 11.4.3-ஐ இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்படுத்தத் தவறிவிட்டது என்பதற்கான தெளிவான ஆதாரத்தைக் காட்டுகின்றன. மேலும், “வீடுகளில்” மட்டுமே வாக்காளர்களைப் பதிவு செய்ய வழிமுறை உள்ளது, “இடங்களில்” (plots) அல்ல. உண்மையில், தி பிரிண்ட்டின் அறிக்கை, வீட்டு எண் 265-உடன் தொடர்புடைய உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை 630-ஐவிட அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

ஊடகங்களின் கடமை

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டுக்குரிய வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் குழப்பமான முறையில், 2022இன் வருடாந்திர சிறப்புச் சுருக்கத் திருத்தத்தில் 3 கோடி நகல் பதிவுகளை வெற்றிகரமாக அகற்றப் பயன்படுத்திய, மேம்பட்ட கணினிப் பணிகளுக்கான மையத்தால் உருவாக்கப்பட்ட நகல் அகற்றும் கருவியைப் பயன்படுத்தத் தேர்வு செய்யவில்லை என்று கூறியது. ஆனால் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் கையாண்ட விதம் மோசமானது. மாதக்கணக்கில் உழைத்துத் தொகுத்து முன்வைக்கப்பட்ட தகவல்களை மேலோட்டமாகப் பார்த்து மதிப்பிடும் அபாயகரமான போக்கை அது கைக்கொள்கிறது. வாக்குத் திருட்டு குறித்த அம்பலங்களை உண்மையில் ஊடகங்கள் செய்திருக்க வேண்டும்.

எல்லா இந்தியர்களும் சம பங்குதாரர்களாக இருக்கும் நமது ஜனநாயகச் செயல்முறைகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பொறுப்புக்கூறலைக் கோருவது ஊடகங்களின் வேலை, ஒவ்வொரு குடிமகனின் வேலை. கணித்திரையில் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல்கள், சிசிடிவி காட்சிகள் ஆகியவை அடிப்படையான வெளிப்படைத்தன்மையாகும். ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நியாயமற்ற அலட்சியத்தைப் பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

எதிர்க்கட்சிகள் தங்களால் இயன்றதைச் செய்துவருகின்றன; அவை வெளிப்படையான, மறுக்க முடியாத ஆதாரங்களைச் சேகரித்துள்ளன, ஆனால் அவற்றுக்கு மௌனமும் திசை திருப்புதலும் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. பொதுக் கருத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மாபெரும் அபாயத்தின் இத அறிகுறியைத் தீவிரமாகப் புறக்கணிப்பதாகத் தெரிகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்தக் குற்றச்சாட்டுக்களை மிக அலட்சியமாகக் கையாள்கிறார். ஆனால் இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் ஆழமாகச் சிதைந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் பெரிதாக வளர்ந்துவருகின்றன. குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மையான விசாரணையைத் தவிர வேறு எதுவும் நியாயமான எதிர்வினையாக இருக்க முடியாது.

அமிதாப் துபே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

நன்றி: திபிரிண்ட் இனைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share