தேர்தலில் போட்டியிடாத மேலும் 476 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Published On:

| By Mathi

Election Commission India

தேர்தல்களில் போட்டியிடாத மேலும் 476 அரசியல் கட்சிகளை ‘பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி’களின் பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன.

ADVERTISEMENT

இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின், (சின்னம், வரி விலக்கு) உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் பயன்களைப் பெறுகின்றன.

அரசியல் கட்சிகளுக்கான பதிவுகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக விரிவான மற்றும் தொடர் நடவடிக்கைகள் மூலம் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென நாடு தழுவிய ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இதற்கான முதற்கட்டப் பணியில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே 334 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து கடந்த ஆகஸ்ட் 9-ந் தேதி நீக்கியுள்ளது. இதனையடுத்து இப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இரண்டாம் சுற்று நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்தவொரு அரசியல் கட்சியும் பட்டியலில் இருந்து முறையற்ற வகையில் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கட்சிகள் தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

மாநில தலைமை தேர்தல் அலுவலர்களின் அறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share