தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், மகனே தந்தையை வேவு பார்த்தார் என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் பாமக இரு அணியாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானார் ராமதாஸ்.
இதுதொடர்பாக, ராமதாஸின் ஆலோசனைப்படி பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் லெட்டர்பேடில், கிளியனூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் கடந்த 15ஆம் தேதி ஒரு புகார் கொடுக்கப்பட்டது.
அதில், ‘ஜூலை 9ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருவியை யார் வைத்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
புகார் கொடுத்தபோது அந்த கருவியை போலீசாரிடம் ராமதாஸ் சார்பில் ஒப்படைக்கப்படவில்லை.
இந்த புகாரை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி, கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் போலீசார் விசாரணைக்காக தைலாபுரம் தோட்டம் சென்று திரும்பினர்.
அதே தினத்தன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தமிழ்நாட்டில் சைபர் க்ரைம் என்று ஒன்று இருக்கிறதா? அது சைபர் க்ரைம் இல்லை… ஜீரோ க்ரைம் என காவல்துறையை விமர்சனம் செய்தார்.
இந்த புகார் கொடுத்து இரண்டு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதைப்பற்றி தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் கேட்டோம்.
‘டாக்டர் ராமதாஸ் இரண்டு மாத காலமாகவே மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். தைலாபுரம் தோட்டத்தில் பொதுவெளியில் பேசினாலும், ரகசியமாக பேசினாலும், தொலைபேசியில் பேசினாலும் அனைத்து தகவல்களும் அன்புமணியின் குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தெரிந்துவிடுகிறது.
சேலம் அருள் எம்.எல்.ஏ., பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி ஆகியோர் ராமதாஸுடன் ஆலோசனை செய்தால் அந்த தகவல் அன்புமணிக்கு தெரிந்து… அவர் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்புகொண்டு கேட்கிறார்.
கடந்த ஜூன் 4ஆம் தேதி தவாக தலைவர் வேல்முருகன் அண்ணன் திருமால்வளவன் தைலாபுரத்துக்கு சென்று ராமதாஸை சந்தித்தித்துவிட்டு வந்தார். ஜூன் 5ஆம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியும், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் சென்று சந்தித்தனர். அனைவரும் ராமதாஸிடம் தனியாக பேசிவிட்டு சென்றனர்.
இதையடுத்து அன்புமணி, திருமால்வளவனிடமும், சைதை துரைசாமியிடமும் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ”நீங்கள் இப்படியெல்லாம் அவரிடம் (ராமதாஸிடம்) பேசியிருக்கிறீர்களே சரியா?” என்று கேட்டிருக்கிறார்.
இதை கேட்டு திருமால்வளவனும், சைதை துரைசாமியும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நாம் பேசியது அன்புமணிக்கு எப்படி தெரியும் என்று குழம்பிய அவர்கள், இந்த தகவல்களை ராமதாஸ்யிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதேபோல, ராமதாஸ் யாரிடம் போன் பேசினாலும், அவர்களை தொடர்புகொண்டு அன்புமணியும் அவரது மனைவி சௌமியவும் பேசினர். உதாரணமாக, கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் ராமதாஸ் தொடர்புகொண்டு பேசி, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.
அடுத்த சில மணி நேரங்களில் சௌவுமியா அன்புமணி, கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினார். ‘ராமதாஸ் அழைக்கிறார்’ என்று தைலாபுரத்துக்கு சென்றுவிடாதீர்கள். அன்புமணிதான் கட்சி தலைவர் என்று கூறியிருக்கிறார். அவரைத்தொடர்ந்து அன்புமணியும் பேசியிருக்கிறார்.
இதேபோல எல்லா விஷயமும் அன்புமணிக்கு தெரிகிறது என்று மன உளைச்சலுக்கு ஆளான ராமதாஸ். இதனால் தனக்கு தெரிந்த தொழில்நுட்ப வல்லுநருடன் ஆலோசித்துள்ளார்.
அதன்பின் வீட்டில் எல்லா இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஜூலை 5ஆம் தேதி ராமதாஸ் அமரும் ஷோபாவில் ஒட்டு கேட்கும் கருவியைப் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு நாள் அமைதியாக இருந்த ராமதாஸ், பின்னர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை செய்தார். இந்த கருவியை தமிழக உளவுத் துறை வைத்திருக்குமா அல்லது பத்திரிகையாளர்கள் வைத்திருப்பார்களா என ஆலோசித்தபோது, இல்லை … இல்லை… நான் என்ன பேசினாலும் அன்புமணியின் குடும்பத்துக்கு உடனுக்குடன் தகவல் போகிறது. அது எப்படி போகிறது என்று கேட்டுள்ளார் ராமதாஸ். அதன்பின் தான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது’ என்றனர்.
இந்த புகாரை பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“பாமக சார்பில் புகார் கொடுத்தார்கள். சம்பந்தப்பட்ட வழக்கு சொத்தான, ஒட்டு கேட்கும் கருவியை ஒப்படைக்கவில்லை. கருவி கொடுத்தால்தான் கண்டுபிடிக்க முடியும். அதிலிருக்கும் சிம் கார்டு வேண்டும் என்று போலீசார் கேட்டனர். அதன் பிறகே, கருவியை கொண்டு வந்து கொடுத்தனர்.
ஆனால் அந்த கருவியின் மேல் பகுதி இல்லை. பார்கோடு அழிக்கப்பட்டிருந்தது. எந்த நிறுவனம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி, மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அதிலிருந்த சிம் கார்டு சுரண்டப்பட்டிருந்தது. வெறும் 3 பி.சி. போர்ட்டு மட்டுமே ஒப்படைத்தனர்.
இப்படி உதிரிபாகங்கள் மட்டுமே கொடுத்தால் எப்படி கண்டு பிடிக்க முடியும்? யார் இப்படி செய்தது? மற்ற பாகங்கள் எங்கே என்று போலீசார் கேட்டதற்கு, எனக்கு தெரியாது… எல்லாமே ஐயாவுக்குதான் தெரியும் என்று கைவிரித்தார் புகார் கொடுத்த அன்பழகன்.
சரி, கருவியை எங்கு கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்தோம். அவர்கள்தான் கருவியை கழட்டி பார்த்து இப்படி கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
பார்கோடு, கருவியின் மேல் பகுதி இருந்தால் தான் விசாரணையை சரியாக எடுத்துச் செல்ல முடியும். கருவியை பார்க்கும் போது, அதை யார் வைத்தார்கள் என கண்டிபிடிப்பதற்காக கொடுத்தார்களா… அல்லது கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கொடுத்தார்களா என நினைக்க தோன்றுகிறது.

மேலும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான 2 மாத காட்சிகள் விசாரணைக்காக தேவைப்படுகிறது அதை ஒப்படைக்க அவர்கள் முன்வரவில்லை. இருந்தாலும் புலன் விசாரணையை முன்னேடுக்க மேலிடம் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்.. சைபர் க்ரைம் இல்லை ஜீரோ க்ரைம் என்று விமர்சனம் செய்யக்கூடிய பாமக நிறுவனர் ராமதாஸ் சிபிஐ விசாரணையை கோரலாமே” என்கிறார்கள்.
இந்தசூழலில் இன்று (ஆகஸ்ட் 2) செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மகனே தந்தையை வேவு பார்த்திருக்கிறார்” என்று அன்புமணி மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக மீண்டும் ராமதாஸ் தரப்பில் கேட்டபோது, ’இதுவரை மகனை வழக்கில் சிக்க வைக்க வேண்டாம் என்றுதான் டாக்டர் நினைத்து போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி போட்டியாக பொதுக்குழு அறிவித்திருக்கிறார். இனிமேலும் விடக்கூடாது என்பதால் ஒட்டு கேட்கும் கருவி மூலம் மகனே வேவு பார்த்தார் என்று பிரஸ்மீட்டில் வெளிப்படையாக சொல்லிவிட்டார்” என்றனர்