வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர்களில் ஒருவர் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சியின் – ஆர்ஜேடி RJD நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் (Lalu Prasad Yadav). ஊழல் வழக்கு, சிறை தண்டனை, வயது மூப்பு ஆகியவற்றால் ஆக்டிவ் அரசியலில் இருந்து லாலு விலகி இருக்கிறார்.
லாலுவுக்கு பதில் அவரது மகன் தேஜஸ்வி யாதவ், தந்தையைப் போல பாஜகவுக்கு எதிரான தலைவராக உருவெடுத்துள்ளார். தற்போது முடிவடைந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வியின் ஆர்ஜேடி கட்சி வாக்கு சதவீதத்தில் அதிகம் பெற்றிருந்தாலும் 25 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது.
பீகார் தேர்தலில் ஆர்ஜேடி அடைந்த தோல்வி, லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் பெரும் சுனாமியாக தாக்கிக் கொண்டிருக்கிறது.
லாலுவும் ராப்ரியும்
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நிறுவனரும் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகாரின் முன்னாள் முதல்வர்; மத்திய ரயில்வே அமைச்சராகவும் பத் வகித்தார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாலுவின் மனைவி ராப்ரி தேவியும் பீகார் முன்னாள் முதல்வர்.

தேஜஸ்வி யாதவ்
லாலு- ராப்ரி தேவி தம்பதியின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தற்போதைய தலைவர்; பீகார் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்.
தேஜ் பிரதாப் யாதவ்
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், சர்ச்சைகளின் நாயகன். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய தேஜ் பிரதாப் யாதவ், தம்பி தேஜஸ்வியுடன் ஏற்பட்ட மோதலால் ‘ஜன்சக்தி ஜனதா தளம்’ என்ற தனிக் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். தேஜ் பிரதாப் தனிப்பட்ட வாழ்வும் பெரும் பிரச்சனைக்குரியது. 2018-ல் ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவகாரத்து செய்தார். அதேபோல அனுஷ்கா யாதவ் என்பவருடனான தேஜ் பிரதாப்பின் உறவும் சர்ச்சையானது.

மிசா பாரதியும் ரோஹினியும்
லாலுவின் மூத்த மகளான மிசா பாரதி, மக்களவை எம்.பி. மற்றொரு மகள் ரோஹிணி ஆச்சார்யா, லாலுவுக்கு மாற்று சிறுநீரகம் கொடுத்தவர்; பீகார் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
லாலுவுக்கு மேலும் 5 மகள்கள் உள்ளனர். லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தம் 2 மகன்கள், 7 மகள்கள்.
சரி லாலு குடும்பத்தில் என்னதான் பிரச்சனை?
லாலு குடும்பத்தில் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக முத்அலில் போர்க்கொடி தூக்கியவர் ரோஹிணி ஆச்சார்யா.
பீகார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியை சந்தித்த நிலையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது ‘வலது கரங்களான’ சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோர் தன்னை அவமதித்து, தவறாகப் பேசி, பாட்னாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் இருந்து வெளியேற்றியதாக ரோஹிணி பகிரங்கமாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரகம் தானம் செய்ததை சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட ரோஹிணி, “பாதிப்படைந்த சிறுநீரகத்தை” தாம் கொடுத்ததாகவும், கட்சியினரிடம் பணம் வாங்கியதாகவும் அவதூறு பரப்புகின்றனர்; தேஜஸ்வியும் அவரது ‘வலது கரங்களும்’தான் அத்தனைக்கும் காரணம்; ஆகையால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தார் ரோஹினி.

ரோஹினியின் குற்றச்சாட்டுகள் என்ன?
பாட்னா விமான் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹினி, “எனக்கு குடும்பமே இல்லை. இதை நீங்கள் சஞ்சய் யாதவ், ரமீஸ், தேஜஸ்வி யாதவிடம்தான் கேட்க வேண்டும்.. அவர்கள்தான் என்னை எங்க குடும்பத்திலிருந்து வெளியே துரத்திவிட்டவர்கள். என்னை அவமதித்தார்கள்.. செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள்” என குமுறி இருந்தார்.
தற்போதைய சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிட விரும்பியதாகவும் சஞ்சய் யாதவ்தான் தமக்கு சீட் தரவிடாமல் தடுத்ததாகவும் ரோஹினி குற்றம்சாட்டுகிறார் என்பதும் ஒரு கருத்து.
மேலும் 2024 மக்களவைத் தேர்தலின் போது பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிட விரும்பிய தம்மை சரண் தொகுதியில் போட்டியிட வைத்து தோற்கடித்ததே சஞ்சய் யாதவ் என்பதும் ரோஹினியின் குற்றச்சாட்டு.
ரோஹினிக்கு பெருகும் ஆதரவு
இந்த விவகாரத்தில், லாலுவின் மூத்த மகனும், தேஜஸ்வியின் சகோதரருமான தேஜ் பிரதாப் யாதவ், ரோஹிணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், “துரோகிகள்” தங்கள் குடும்பத்தை குறிவைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாலுவின் மற்ற மகள்களான ராகிணி, சாந்தா, ராஜலட்சுமி ஆகியோரும் பாட்னாவில் உள்ள தங்கள் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்றனர்.
சஞ்சய் யாதவ் என்ன சொல்கிறார்?
லாலு குடும்பத்தில் ஏற்பட்ட புயலுக்கு காரணமான பெயர்களில் ஒன்று சஞ்சய் யாதவ். ஆர்ஜேடியின் மாநிலங்களவை எம்பி; தேஜஸ்வி யாதவின் நம்பிக்கைக்குரிய தளபதி. இந்த சர்ச்சையில் சிக்கிய ரமீஸ் நேமத் கான், தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர்- ஆலோசகர்.
அதே நேரத்தில் தேஜஸ்வி யாதவின் தலைமைக்கு எதிரானவராக ரோஹினி உருவெடுக்கக் கூடும் என்று அச்சப்பட்டதாலேயே சஞ்சய் யாதவ், அவரை ஒதுக்கி வைத்தார் என்கிற கருத்தும் நிலவுகிறது.
லாலு குடும்பத்தை உலுக்கும் புயல் ஓயுமா? விஸ்வரூபம் எடுக்குமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.
