டிஜிட்டல் திண்ணை: திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் மாற்றமா? உண்மை என்ன?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும் ‘வதந்தி என்றால் என்ன? வதந்திகள் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடம் படிப்பது போல படித்துக் கொண்டே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

“திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் நீக்கம் – புதிய பொதுச் செயலாளராகிறார் டிஆர் பாலு – திமுகவின் புதிய பொதுச்செயலாளர் ஆ.ராசா – திமுகவின் பொருளாளராக நேரு நியமிக்கப்படுகிறார் – எ.வ.வேலுவுக்கு திமுகவில் பொருளாளர் பதவி – திமுகவின் துணை பொதுச்செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்” என்றெல்லாம் கடந்த சில நாட்களாக செய்திகள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் நீக்கப்படுகிறார் என்ற செய்தி, வன்னியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரமாக பரப்பப்படுகிறது.

இது தொடர்பாக வன்னியர் சமூக அரசு அதிகாரிகள் கூறுகையில், “எப்ப பார்த்தாலும் துரைமுருகனையே ஏன் திமுகவில் குறிவைக்கிறாங்க? இப்பதான் அவரிடம் இருந்து கனிமவளத்துறையை பறிச்சாங்க. இப்ப பொதுச்செயலாளர் பதவியையும் பறிக்கிறாங்களா? ஏன் இப்படி திமுக தலைமை நடந்து கொள்கிறது.. இது வன்னியர்களிடம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்திவிடும்” என்றெல்லாம் குமுறுகின்றனர்.

சரி… என்னதான் கட்சியில் நடக்கிறது? என திமுக முக்கிய தலைவர்களிடம் நாம் பேசினோம்.

அப்போது, “திமுகவின் ஒவ்வொரு பொதுக்குழு கூடும் போதும் இப்படியான வதந்திகளை கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கின்றனர். மதுரையில் திமுக பொதுக் குழு ஜூன் 1-ந் தேதி நடப்பதற்கு முன்னரும் கூட, முதல்வர் ஸ்டாலின் இதைச் செய்யப் போகிறார். அதைச் செய்யப் போகிறார். அவர் பதவிக்கு ஆபத்து. இவர் பதவி பறிபோகுது. அவர் உள்ளே வரப்போறாரு என ஏகத்துக்குமான பேசினர், எழுதினர்.

ஆனால், ஒன்றுமே நடக்கலையே. அமைச்சர் துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. அவரது உடல்நிலையும் முன்னரைப் போல இல்லை. 2 நிமிடங்கள் நின்றால் கூட அவ்வப்போது மயக்கமடைந்து விடுகிறார். அதற்காக இப்படியா பரப்பிவிடுவது?

தேர்தல் நேரத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவராவது இது போல முடிவு எடுப்பாரா? அதுவும் அரசியல் செய்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இப்படி ஒரு முடிவை எடுப்பாரா?

மதுரை பொதுக்குழுவில் பேசும் போது கூட, தாம் அரசியல் தொடர்பானவற்றையே முழுமையாகப் பார்க்கிறேன். கவனம் செலுத்துகிறேன் என சொல்லி இருந்தார் ஸ்டாலின். அப்படிப்பட்ட நிலையில் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான வன்னியர்கள் கோபப்படும் அளவுக்கு ஏதாவது ஒன்றையாவது ஸ்டாலின் செய்வாரா?

ஒரு செயலை செய்தால் அது எந்த இடத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்? அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? என்பது எல்லாம் தெரிந்தவர்தான் முதல்வர் ஸ்டாலின்” என இடைவிடாமல் பரப்பப்படும் செய்திகள் அத்தனையையும் திட்டவட்டமாக மறுக்கின்றனர். Duraimurugan change from DMK general secretary post?

மேலும், செப்டம்பர் 15-ந் தேதிக்குள் இப்படி மாற்றம் நடக்கும். அப்படி மாற்றம் நடக்கும் என்கின்றனர். திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் எல்லாமே பொதுக்குழுவில்தான் தேர்ந்தெடுக்கப்படுவர்.

திமுகவின் பொதுக்குழு மதுரையில் நடந்தே முடிந்துவிட்டதே. ஒருவேளை இப்ப பரவுகிற மாதிரி செய்யனும் என முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் அதை மதுரை பொதுகுழுவிலேயே செஞ்சிருப்பாரே. இதை கூட புரிந்து கொள்ளாமல்தான் பரப்பிவிடுகின்றனர்” என்று சுட்டிக்காட்டி, திமுகவின் தலைமை கட்டமைப்பில் தற்போதைக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை என உறுதியாக சொல்கின்றனர் திமுக முக்கிய நிர்வாகிகள் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Duraimurugan change from DMK general secretary post?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share