டிஜிட்டல் திண்ணை: மோடியை திடீரென சந்தித்த துரை வைகோ- திமுக ஷாக்! டிஜிபி நியமனத்தில் வெடித்த சர்ச்சை என்ன?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்த போது வழக்கத்துக்கு மாறாக, “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்” என்ற திருக்குறளை வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

சொல்லும் செயலும் வெவ்வேறாக இருப்பது
அரசியலில் சகஜம்தானே..

ADVERTISEMENT

ஆமாம்.. டெல்லியில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சந்தித்து பேசியிருப்பதை திமுக எம்பிக்கள் புருவத்தை உயர்த்தியபடி பார்க்கின்றனர்.

எதற்காக மோடியை துரை வைகோ சந்தித்தார்?

ADVERTISEMENT

“ரஷ்யா- உக்ரைன் போரில் கட்டாயமாக போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழகத்தின் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன்” என சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார் துரை வைகோ.

நல்ல விஷயம்தானே..?

ADVERTISEMENT

திமுக எம்பிக்களோ, “பிரதமர் மோடி, எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு தம்மை சந்திக்க எளிதாக அப்பாயிண்ட்மென்ட் கொடுப்பவர் அல்ல. ஒருமுறை பிரதமர் மோடியை தமிழக பிரச்சனைக்காக சந்திக்க திமுக எம்பிக்கள் நேரம் கேட்டிருந்தனர்; பிரதமர் மோடியும் நேரம் ஒதுக்கி இருந்தார். இதனால் பிரதமர் அலுவலகம் முன்பாக திமுக எம்பிக்கள் அனைவரும் காத்திருந்தனர்; நீண்டநேரம் திமுக எம்பிக்கள் காத்திருந்த போது, டிஆர் பாலுவை மட்டும் அழைத்து பேசினார்; மற்ற திமுக எம்பிக்களை பார்க்காமலேயே அனுப்பி வைத்தார் மோடி. அப்படியான அனுபவங்களை ஒப்பிடுகையில், துரை வைகோவுக்கு எளிதாக மோடி அப்பாயிண்ட்மென்ட் கொடுத்திருப்பது ஆச்சரியம்தானே” என்கின்றனர்.

அதுவும் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை வைகோ சந்தித்துவிட்டு, “பாஜகவுடன் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் இம்மியளவும் மதிமுக உறவு வைத்துக் கொள்ளாது” என திட்டவட்டமாக பேசிய அடுத்த நாளிலேயே துரை வைகோவுக்கு கேட்ட உடன் மோடி அப்பாயிண்ட்மென்ட் கொடுத்திருக்கிறாரே” என்கின்றனர்

“ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்த மக்களவை விவாதத்தின் போது திமுக கூட்டணி எம்பிக்கள் எல்லோரும் மோடி அரசை வெளுத்து வாங்கினர்; ஆனால் துரை வைகோ மட்டும் போகிற போக்கில் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மேலோட்டமாக பேசிவிட்டு, பெரும்பகுதி நேரம் ரஷ்யா- உக்ரைன் போரில் சிக்கிய கிஷோர் சரவணன் விவகாரத்தையே பேசினார்.. ‘இந்தியா கூட்டணி’யில் இருந்து கொண்டும் மோடி அரசை காட்டமாக துரை வைகோ அப்போது விமர்சிக்கவில்லையே” எனவும் சுட்டிக் காட்டுகின்றனர் திமுக கூட்டணி எம்பிக்கள்.

ஓஹோ.. ஓபிஎஸ் இன்று காலையில் விடிந்தும் விடியாததுமாக அறிக்கை வெளியிட்டாரே?

முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்த பின்னர் அரசியல் களத்தில் பேசுபொருளானார். “திமுகவில் இணையப் போகிறார்.. திமுகவின் பி டீம் என்பதை காட்டிவிட்டார்; ஸ்டாலினுடன் நீண்டகால தொடர்பில் இருந்ததாலேயே ஓபிஎஸ் சந்தித்து பேசினார்” என அதிமுக- பாஜக தலைவர்கள் பிரஸ் மீட் முதல் டிவி டிபேட் வரை விமர்சித்தனர். இதற்கு பதில் தரும் வகையில்தான் அறிக்கை வெளியிட்டு ஆஃப் செய்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் தரப்பு ‘அங்கிட்டும் இங்கிட்டுமாக’ ஒரே அல்லாட்டம்தான் போலவே?

ஆமாம்.. தவெக தலைவர் நடிகர் விஜய்யை எப்படியாவது சந்தித்து பேசுவதற்கு ‘நேரம்’ கேட்டுக் கொண்டே இருக்கிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத். விஜய் தரப்போ, இதுவரை Yes/ No என்பதில் எந்த பட்டனையும் அழுத்தாமல் அமைதியாக இருக்கிறதாம்..

நெல்லையில் கமகம செம்ம விருந்து எப்படி?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘விருந்து அரசியலை’ ஜரூராக செய்து கொண்டிருக்கிறார்.

ஜூலை 26-ந் தேதி நெல்லை வீட்டில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களான எச்.ராஜா, பொன்னார், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை என அனைவரையும் அழைத்து ஒரே மேஜையில் உட்கார வைத்து விருந்து கொடுத்தார் நயினார்.

இதன் அடுத்த கட்டமாக, அதிமுக- பாஜக தலைவர்களிடையே இணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, மீண்டும் ஒரு விருந்தை ஆகஸ்ட் 3-ந் தேதி ஆடி 18 அன்று ஏற்பாடு செய்தார் நயினார்.

நெல்லை சீமையில் சுற்று பயணம் செய்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்பி வேலுமணி, ஆர்பி உதயகுமார், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அதிமுக ‘தலை’களையும் பாஜகவின் சீனியர் ‘தலை’களையும் ஒரே ‘பந்தியில்’ உட்கார வைத்து விருந்து கொடுத்தார் நயினார்.

109 வகையான உணவு வகைகளுடன் பரிமாறப்பட்ட விருந்தில் அனைவரது கண்களும் தேடிய ‘அண்ணாமலை’ மட்டும் மிஸ்ஸிங்.

இத்தனைக்கும் ஆகஸ்ட் 3-ந் தேதி காலையில் ஈரோட்டில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரும் ஒன்றாகவே தீரன் சின்னமலை சிலையின் 220-வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர்; இருவரும் ஒன்றாகவே ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நயினார் நாகேந்திரன் மட்டும் நெல்லை திரும்பினார்.. காலை முதல் பிற்பகல் வரை அவருடன் ஒன்றாகவே இருந்த அண்ணாமலை இரவு விருந்தில் பங்கேற்கவில்லை.

என்ன காரணம்?

இதுபற்றி பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அண்ணாமலையைப் பொறுத்தவரையில் “எடப்பாடி முதல்வராகவே முடியாது; எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதற்கு நான் ஏன் பாடுபட வேண்டும்? அவரை எல்லாம் ஏற்கவே முடியாது” என தமக்கு நெருங்கிய சகாக்களிடம் சொல்லி வருகிறார்.. அதனை வெளிப்படுத்தும் வகையில்தான் நயினார் நாகேந்திரன், அதிமுகவினருக்கு கொடுத்த விருந்தில் மிஸ் ஆனார் அண்ணாமலை” என சொல்கின்றனர்.

விருந்து மட்டும்தானா?

“விருந்துக்கு முன்னதாக நயினார் நாகேந்திரன் வீட்டு மாடியில், அதிமுக- பாஜக தலைவர்கள் மட்டும் சுமார் 1 மணி நேரம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்..” என்கின்றன நெல்லை தகவல்கள்.

புதிய டிஜிபி நியமன அறிவிப்பு எப்போது?

புதிய டிஜிபி ‘அவர்தானா” என நாம் மின்னம்பலத்தில் விரிவாகவே எழுதி இருந்தோம். அதில் சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகியோர் ரேஸில் இருப்பதை குறிப்பிட்டிருந்தோம்.

இதில் என்ன சிக்கலாம்?

இது பற்றி கோட்டை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது,” டிஜிபி ரேஸில் இருக்கும் ராஜீவ் குமாரைப் பொறுத்த வரையில், ‘தான் நினைத்ததை மட்டுமே சரி’ என்பதில் ரொம்பவே பிடிவாதமாக இருப்பவர் என்கிற கருத்து அழுத்தமாக சிஎம் முன்பாக வைக்கப்பட்டது.

அதேபோல தற்போது, சந்தீப் ராய் ரத்தோர் தொடர்பாக சில கோப்புகள் சிஎம் ஸ்டாலின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 3 முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது கமிஷனராக நாஞ்சில் குமரன் இருந்தார்; துணை ஆணையராக இருந்தவர் சந்தீப் ராய் ரத்தோர்.

குண்டு வெடிப்புக்கு முன்னர், ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் வெடி மருந்துகளை பதுக்கி வைத்துள்ளனர் என தமக்கு கிடைத்த தகவலை வைத்து சந்தீப் ராய் ரத்தோரை அனுப்பினார் நாஞ்சில் குமரன். ஆனால் அந்த இடத்துக்கு போய்விட்டு திரும்பிய சந்தீப் ராய் ரத்தோர் அப்படி எதுவுமே இல்லை என்றாராம்.

அதே நேரத்தில் கமிஷனர் நாஞ்சில் குமரனுக்கு மீண்டும் ஒரு தகவல் வருகிறது. அதில், ரத்தோர் பார்த்தது பயங்கரவாதிகள் வெடிமருந்தை பதுக்கிய கட்டிடத்தின் கீழ்தளத்தில்தான். ஆனால் முதல் மாடியில் வெடிபொருட்கள் இருக்கின்றன. அதை பார்க்காமல் வந்துவிட்டார் என சொல்லப்பட்டது.

இதனையடுத்து, ‘முதல் மாடியில் வெடிபொருட்கள்’ இருக்கின்றன.. அதை செக் செய்துவிட்டு வாங்க என சந்தீப் ராய் ரத்தோரை திரும்பவும் அனுப்பி வைத்தார் நாஞ்சில் குமரன்.

இந்த முறை சந்தீப் ராய் ரத்தோர் அந்த கட்டிடத்துக்கு செல்வதற்குள், மேல் மாடியில் இருந்த வெடிபொருட்களை பயங்கரவாதிகள் பக்கத்தில் இருந்த கட்டிடத்துக்கு மாற்றிவிட்டனர். இதனால் குறிப்பிட்ட கட்டிடத்தை மட்டும் சோதனை செய்துவிட்டு மீண்டும் வெடிபொருட்கள் இல்லை என திரும்பிவிட்டார்.

வெடி பொருட்கள் விவகாரமாச்சே, பக்கத்து கட்டிடங்களிலும் சோதனை செய்யலாம் என ரத்தோர் நடவடிக்கை எடுத்திருந்தால் அவ்வளவு பெரிய கோவை குண்டு வெடிப்பு சம்பவமே நடந்திருக்காது என்பது ஒரு பைலாம்.

இன்னொன்று, சென்னையில் கமிஷனராக இருந்த போது ரியல் எஸ்டேட் கும்பலுடன் சந்தீப் ராய் ரத்தோர் ரொம்பவே நெருக்கமாக இணைந்து ‘கோடிகளில்’ செயல்பட்ட விவகாரமாம்.

மூன்றாவதாக திண்டுக்கல் எஸ்பியாக பணிபுரிந்த போது சில குற்றச்சாட்டுகளாம்.

இப்படி திடீரென சந்தீப் ராய் ரத்தோர் பற்றிய பைல்கள் வந்ததால்தான் டிஜிபி நியமனத்தில் தாமதம்” என்கின்றன.

ஆக.. ரேஸில் இருந்து சந்தீப் ராய் ரத்தோர் அவுட்?

அப்படித்தான்.. தற்போதைக்கு ரேஸில் 2-வதாக இருந்த சீமா அகர்வால் முதலிடத்துக்கு நகர்ந்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே பெண் டிஜிபியாக லத்திகா சரண் இருந்தார்; அவருக்கு அடுத்ததாக சீமா அகர்வால் டிஜிபியாக வாய்ப்பு இருக்கிறது என்கின்றன கோட்டை தகவல்கள்.

டிஜிபி நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளதே..

புதிய டிஜிபி பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி.மரியா கிளாட் பெஞ்ச் , “அரசின் நிர்வாக ரீதியான இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால் புதிய டிஜிபி நியமனம் உச்சநீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் ” என கூறியுள்ளது. அதாவது, டிஜிபி விவகாரத்தில் விதி மீறல் நடந்தால் தலையிடுவோம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்திருப்பதுதான் கோட்டையில் ஹாட் டாபிக் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டி விட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share