ஒரு மொழியில் பிரபலமாக இருக்கிற நட்சத்திர நடிகர், இன்னொரு மொழியில் வெளியான திரைப்படத்தை, அதில் நடித்த நடிகர் நடிகையரைப் பாராட்டுவதை அடிக்கடி நாம் காண முடியாது.
‘லவ் மேரேஜ்’ படம் குறித்தும், அதன் நாயகன் விக்ரம் பிரபு குறித்தும் மலையாள நடிகர் துல்கர் சல்மான் பாராட்டு தெரிவித்திருப்பது அந்த வகையில் நம்மை ஆச்சர்யத்தில் தள்ளியிருக்கிறது.
’லவ் மேரேஜ் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார் சகோதரர் விக்ரம் பிரபு. அதனை எல்லோரும் கண்டு ரசிக்க வேண்டும்.
இந்த சீசனில் உங்களை ஈர்க்கிற விதமாக இப்படம் இருக்கும். பாராட்டுகள்’ என்று தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான், விக்ரம் பிரபு இருவருமே நட்சத்திர வாரிசுகள் என்றபோதும், மும்பையிலுள்ள பாரி ஜான் ஆக்டிங் ஸ்டூடியோவில் ஒரே காலகட்டத்தில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பதால் இருவருக்கும் தனிப்பட்ட அறிமுகம் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரியின் இயக்கத்தில் இருவரும் ஒரு படத்தில் நடிப்பதாகவும் முடிவாகியிருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பு முழுமை அடையவில்லை என்று சொல்லப்படுகிறது. Dulquer Salmaan appreciates Vikram Prabhu