கேரள சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துல்கர் சல்மானின் சொகுசு கார்கள் இன்று (செப்டம்பர் 23) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆபரேஷன் நம்கோரின் ஒரு பகுதியாக, பூட்டானில் இருந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட இறக்குமதிகள் குறித்து மாநிலம் தழுவிய விசாரணையின் மத்தியில், கேரளாவில் சுங்க அதிகாரிகள் பல சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான இரண்டு கார்களும் அடங்கும்.
இந்தியாவிற்குள் செகண்ட் ஹேண்ட் ஆடம்பர கார்களை அவ்வளவு எளிதாக இறக்குமதி செய்ய முடியாது. இந்தியாவில் சட்டப்பூர்வமாக அத்தகைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் 200% வரி செலுத்த வேண்டும் உட்பட பல விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்து பூட்டானில் இருந்து இந்தியாவிற்கு 198 சொகுசு வாகனங்கள் சமீபத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பூட்டான் ராணுவத்தால் கைவிடப்பட்ட SUV வாகனங்கள், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் போலி பதிவுகளை உருவாக்கி, நாட்டின் பிற பகுதிகளில் மீண்டும் பதிவு செய்யப்படுவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் சில திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளால் கூட வாங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து கேரளா சுங்கத்துறை புலனாய்வுத் துறை அதிகாரிகள் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, கேரளாவில் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கார்களையும் கண்டறியும் வகையில் ஆபரேஷன் நம்கோர் என்ற பெயரில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் உட்பட கேரளா முழுவதும் சுமார் 30 இடங்களில் இன்று காலை முதல் அம்மாநில சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான் மற்றும் எர்ணாகுளம் தேவாராவில் உள்ள பிருத்விராஜ் போன்ற பிரபல திரைப்பட நடிகர்களின் வீடுகளிலும் ஆபரேஷன் நம்கோரின் கீழ் சோதனை நடத்தப்பட்டன.
பிருத்விராஜின் வீட்டிற்கு சுங்கத்துறையினர் சென்றபோது அங்கு எந்த வாகனங்களும் இல்லாததால், எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.
அதே நேரத்தில் மாத்ருபூமி செய்தித்தாளின்படி, துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் உட்பட கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருந்து 11 சொகுசு எஸ்யூவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஆய்வுக்காக கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.