பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கொண்டாட வேண்டுமென்ற நோக்கில் ’பான் இந்தியா’ படங்களைத் தரச் சில இயக்குனர்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மெனக்கெடுவார்கள். கொஞ்சமாய் ‘மாற்றி யோசி’க்கும் சிலர் அந்தந்த மொழிகளில் தனித்தனியாக ‘ஹிட்’ தந்து ‘பான் இந்தியா’ ஸ்டார் ஆக ஆசைப்படுபவர்கள். அதில் இரண்டாவது ரகம், நடிகர் துல்கர் சல்மான்.
மலையாளத்தில் விதவிதமான கதைகளில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை அள்ளியிருக்கும் இவர் தமிழில் ‘வாயை மூடிப் பேசவும்’, ‘ஓகே கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஹே சினாமிகா’, இந்தியில் ‘கார்வான்’, ‘தி ஸோயா பேக்டர்’, தெலுங்கில் ‘மகாநடி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தந்திருக்கிறார்.
மலையாளத்தில் இறுதியாக ‘கிங் ஆஃப் கோதா’வில் நடித்திருந்தார். அனைத்து மொழி ரசிகர்களும் ரசிக்க வேண்டுமென்ற பேராசையில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்திக்கு ஏற்ற வகையில் ‘பான் இந்தியா’ படமாக ஆக்க ஆசைப்பட்டு கையைச் சுட்டுக் கொண்டார்.
நல்லவேளையாக, அந்த தோல்வியைச் சரி செய்யத் துல்கர் சல்மான் அவசரப்படவே இல்லை. நிதானமாக ‘லக்கி பாஸ்கர்’ தந்தார். இதோ இப்போது தமிழில் ‘காந்தா’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.
நேற்று (ஜூலை 28) அவரது பிறந்தநாளையொட்டி அப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா போன்ற தமிழ் திரையுலக ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாறாக இப்படம் இருக்கும் என்று கணித்தவர்களை வாய் மூடச் செய்திருக்கிறது இந்த டீசர்.
செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சந்திரன் எனும் நட்சத்திர நாயகனாக வருகிறார் துல்கர் சல்மான். இயக்குனர் சொல்வதை மீறி, படத்தின் ஆக்கத்தில் தலையிடுபவராகக் காட்டப்பட்டிருக்கிறார்.
என்னதான் எம்ஜிஆரின் மேனரிசங்களை வெளிப்படுத்தாவிட்டாலும், மேற்சொன்ன விஷயங்களே ’காந்தா’வில் அவரது ‘ரெஃபரன்ஸ்’ நிறைய இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் குறித்த சித்திரத்தை துல்கர் பிரதிபலிப்பாரோ என்ற கருத்து இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரவலாகிவிட்டது. நிச்சயமாக இப்படம் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கி வருவது போலவே எதிர்ப்பையும் சம்பாதிக்கும் என்று தோன்றுகிறது.
’காந்தா’ மட்டுமல்லாமல் தெலுங்கில் துல்கர் நடித்துவரும் ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோவும் நேற்று வெளியானது.
கூடவே மலையாளத்தில் துல்கர் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கியிருக்கிற ‘லோஹா – சேஃப்டர் 1 சந்திரா’ படத்தின் டீசரும் நேற்று வெளியாகியிருக்கிறது. நஸ்லென் நாயகனாக நடித்திருக்கிற இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ‘சூப்பர்வுமன்’ ஆக நடித்திருக்கிறார். இப்படத்தின் ‘டிஐ’ சர்வதேசத் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பிரமித்து வருகின்றனர்.
மலையாளத்தைப் பொறுத்தவரை, இப்போது நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் ‘ஐ யாம் கேம்’ படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.
ஒரு வெற்றிகரமான நாயகனாக, தயாரிப்பாளராக வலம் வரும் வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளப் பட அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களைத் தெறிக்க விட்டிருக்கிறார்.