கேரளாவின் உச்ச நட்சத்திரமான மம்மூட்டியின் மகன் என்பதை தாண்டி நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் கலக்கி வருகிறார் துல்கர் சல்மான்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த ’லக்கி பாஸ்கர்’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து அவரது வேஃபேரர் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘லோகா சாப்டர் 1; சந்திரா’ படம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகி 13 நாளில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது.
படத்தில் சூப்பர் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் அதகளம் செய்துள்ள நிலையில் அவருக்கும், படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் படத்தை தயாரித்ததோடு, அதில் கேமியோவாகவும் தோன்றிய துல்கர் சல்மான், தற்போது 2 அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.
அதன்படி ரூ.32 கோடியில் உருவான லோகா திரைப்படம், 300 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் மூலம் வரும் லாபத்தை படக்குழுவினோரோடு பகிர்ந்து கொள்ள உள்ளாராம் துல்கர்.
அதோடு லோகாவுக்கு பெருகி வரும் ஆதரவையும், வசூலையும் தடுக்காத வகையில், தான் அடுத்து தயாரித்து நடித்து வரும் காந்தா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் மாற்றியுள்ளாராம்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதில் இருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம்.
எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம்.
மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவைத் வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம். இதற்காக காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கின்றோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மறைந்த முன்னோடி நடிகர்களின் வாழ்க்கை பிரிதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள காந்தா திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நாளை (செப்டம்பர் 12) வெளியாகவிருந்த ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக துல்கர் சல்மான் தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.