பாகிஸ்தானுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) அரையிறுதிப் போட்டியில் விளையாட இந்திய சாம்பியன்ஸ் அணி திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து, பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் முன்னாள் வீரர்கள் அடங்கிய உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியை வெறும் 13.2 ஓவர்களில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இன்று (ஜூலை 31) நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருந்தது.
ஆனால், பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக எழுந்த அரசியல் பதட்டங்கள் காரணமாக பரம எதிரியான பாகிஸ்தானுடன் அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். ஏற்கெனவே பாகிஸ்தானுடன் விளையாட இருந்த லீக் போட்டியும் இதே காரணம் கூறி ரத்து செய்யப்பட்டது.
மேலும் தொடரின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றாக உள்ள இந்தியாவைச் சேர்ந்த ‘ஈஸ்மைட்ரிப்’ (EaseMyTrip) நிறுவனமும் இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து உலக சாம்பியன்ஸ் தொடரில் இன்று நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மற்றொரு அரையிறுதிப் போட்டி இன்று இரவு 9 மணிக்கு திட்டமிட்டப்படி நடைபெறும்.
அதில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.