ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று (செப்டம்பர் 2) விமான நிலையம் செல்லும் வழியில், சாலையோரம் காத்திருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களை காரில் இருந்து இறங்கி சென்று சந்தித்து பேசியுள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதன்பின்னர் ஆளுநர் மாளிகையில் நேற்று ஓய்வெடுத்த அவர், இன்று காலை திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கீதா ஜீவன் ஆகியோர் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். மதியம் 2.30 மணியளவில் அங்கு நடைபெற்ற 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கிய அவர், “உயர் கல்வித் தரத்தைப் பேணுவதற்கும், அறிவுசார் ஆர்வத்தையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் ஒரு தூண்டுதல் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சிறப்புப் பாராட்டுக்குத் தகுதியானது. விரிவாக்கக் கல்வி மூலம் சமூகத்தின் பரந்த பிரிவினருக்கு கற்றலின் நன்மைகளை இந்தப் பல்கலைக்கழகம் விரிவுபடுத்தி வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய நிகழ்ச்சியில் 3ல் 2 மடங்கு பெண்கள் பட்டம் பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார்.
அந்நிகழ்ச்சிக்கு பின்னர் திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் புறப்பட்டார். அவரது வருகையையொட்டி ஜனாதிபதியைக் காண சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்தனர்.
அதனைக் கண்ட அவர், காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி வந்து அங்கு தன்னைக் காண காத்திருந்த பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும் நலம் விசாரித்தார். பின்னர் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இரவு 7 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி கிளம்பி செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.