2026-ம் ஆண்டு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்; எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்கவே முடியாது என அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2019-ஆம் ஆண்டுமுதல், நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல; எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026-இலும் நிச்சயம் தொடரும்! திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்!
எந்த கொம்பனாலும்..
நான் பெருமையுடன் சொல்கிறேன்… இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது… எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்… இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள்… “கழகம் நம்மைக் காத்தது! நாம் கழகத்தை காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்க முடியாது!
தொடர்ந்து திமுக ஆட்சி- புது வரலாறு
உங்கள் உழைப்பைத் தொடர்ந்து கொடுத்து, திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும்! அதன்மூலமாக, தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது என்று நாம் புது வரலாறு படைக்க வேண்டும்! வரலாறு படைக்கலாமா! தயாராகி விட்டீர்களா!
அதற்காகத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று ஒரு பரப்புரையை முன்னெடுத்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று – அனைத்து வீடுகளுக்கும் சென்று, ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை நம்முடைய இயக்கத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம்!
எங்களுக்கு 75 ஆண்டு ஹிஸ்டரி இருக்கு
தி.மு.க. – என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம்! 75 ஆண்டுகால ஹிஸ்டரி இருக்கிறது நமக்கு! அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே – “தி.மு.க.வை அழிப்போம் – ஒழிப்போம்” என்று சொன்னார்கள்! இப்போதும், சிலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே…
திமுகவுக்கு நீங்கள் எல்லாம் மாற்றா?
“தி.மு.க.விற்கு நாங்கள்தான் மாற்று” என்று… என்ன மாற்றப்போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப்போகிறார்களா? நம்முடைய கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா? மாற்றம்… மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்… மறைந்து போனார்கள்… ஆனால், தி.மு.க. மட்டும் மாறவில்லை! தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை! இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்! நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம்! நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.