41 பேரை பலி கொண்ட கரூர் பெருந்துரய சம்பவத்தை முன்வைத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த தமது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியிலேயே புதிய தமிழகம் நீடிக்கும் என தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் தவெகவுடன் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் விஜய் கட்சியைப் பற்றிய தமது நிலைப்பாட்டை கரூர் சம்பவத்தை முன்வைத்து வெளிப்படுத்தி உள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
அனுபவே இல்லாதவர்கள்…
இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடந்த சம்பவம் துயரமானது; இதை எவரும் மறுக்க இயலாது. விஜய் கட்சியின் அமைப்பாளர்கள் அனுபவமற்றவர்கள் என்பதில் ஐயப்பாடில்லை. விஜய் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மெதுவாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் முழு வடிவம் பெறப் பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகலாம்.
வியூக வகுப்பாளர்கள்
வியூகம் வகுப்பாளர்கள் ஒரு சிலர் உள்ளனர். ஆனால், அவர்களும் கள நிலவரம் தெரியாத புதியவர்கள். விஜய் இவர்களை வைத்தே த.வெ.க கட்சி எனும் தேரை நகர்த்திச் செல்கிறார்.
தவெக எண்ணம் உடனே நிறைவேறுமா?
தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் அவர் பின்னால் சாதி, மதம், மொழி, இனம் கடந்து ஒரு பெரிய கூட்டம் கூடுகிறது. இக்கூட்டங்கள் மூலம் அவர்களின் எண்ணத்தை உடனடியாக நிறைவேற்ற முடியுமா? என்பது வேறு விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.
கரூர் துயரமும் கேள்விகளும்
கரூர் சம்பவம் பற்றி குறிப்பிடுகையில், ” கீழ்கண்ட ஐயப்பாடுகளுக்கு இந்த அரசிடமிருந்து விடை கிடைக்குமா?
· வேலுச்சாமி புரம் சாலை திணிக்கப்பட்டதா? விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
· காவல்துறை அனுமதி வழங்கிய இடத்தில் தானே விஜய் பேசினார்? எனவே, கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசு – காவல்துறையின் குறைபாடு தானே?
· கூட்டம் கூடிய இடத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன?
· விஜய் வாகனத்தை அவ்வளவு கூட்டத்தைத் தாண்டி உள்ளே செலுத்த வேண்டிய அவசியம் என்ன?
· விஜய் கட்சிக்கு என விதிக்கப்பட்ட பிரத்தியேகக் கட்டுப்பாடுகள் நியாயமானதா?
· கூட்டத்தில் தடுமாறி கீழே விழுந்தவர்களை குழந்தை, கர்ப்பிணிகள் எனக்கூடப் பாராமல் மிதித்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதநேயமற்றுப் போனது ஏன்? குறைந்தபட்சம் Civic Sense இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?
· எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு அனைத்து மக்களுக்கானது என்ற உணர்வுடன் அரசியல் பாகுபாடுகள் இல்லாமல் விஜய் நிகழ்ச்சிகளை நடத்த முழு ஒத்துழைப்பும், உரிய பாதுகாப்பும் கொடுத்திருக்க வேண்டாமா?
விஜய் கட்சி நிர்வாகிகள் முன் அனுபவம் பெறாதவர்களே.!
நல்லதும், கெட்டதும் ஒரு புள்ளியிலிருந்துதான் துவங்கும்!
கரூரில் விஜய்யை பேச அனுமதித்தது குறுகலான இடம் என்பது தானே அந்தப் புள்ளி! ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைத்து, புனிதப்படுத்த முடியாது; கூடாது. எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.