சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியா? என்ன சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

Published On:

| By Pandeeswari Gurusamy

Dr Krishnasamy Puthiya Thamilagam To Contest Alone 2026

2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாகவும், அதிமுக தங்களை அவமரியாதை செய்துவிட்டதாகவும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியன் கட்சிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கும் தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி விபரங்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி எஞ்சிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுவிட்டது. தேவேந்திர குல வேளார் மக்களை அதிமுக அவமதித்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்து கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி முறிவு குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது “புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, முதற்கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 60 பொது மற்றும் தனித் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மீதமுள்ள 10 மாவட்டங்களுக்கு விரைவில் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதிமுக உடனான கூட்டணி முறிவு ஏன்?

கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி, கூட்டணி முறிவுக்கான காரணங்களைத் தெரிவித்துள்ளார்.தனிச் சின்னத்தில் போட்டியிட ஏதுவாக 12 முதல் 15 தொகுதிகளை நாங்கள் கேட்டோம். ஆனால், அதிமுக தரப்பு வெறும் 5 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்தது.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றை எதிர்பார்த்த நிலையில், கட்சிக்கு வலுவில்லாத திருவிடைமருதூர் தொகுதியை அதிமுக ஒதுக்கியது.அதேபோல் தென் தமிழகத்தில் தேவேந்திர குல மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டோம்.

ADVERTISEMENT

“முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவிடம் இருந்தது போன்ற அரசியல் அணுகுமுறை தற்போது அதிமுகவிடம் இல்லை. பேச்சுவார்த்தை திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது,” என்று தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி பல்வேறு போராட்டங்களைத் தனியாக முன்னெடுத்துள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் இப்போது வரை புதிய தமிழகம் போராடி வருகிறது என்றும் தெரிவித்தார்.

தேவேந்திர குல மக்கள் அவமதிப்பு

கடந்த 2019 மற்றும் 2024 தேர்தல்களில் தே.ஜ. கூட்டணியில் நீடித்த போதிலும், தற்போது அதிமுக தரப்பு தங்களைப் புறக்கணிப்பதன் மூலம் தேவேந்திர குல மக்களையே அவமதித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தே.ஜ. கூட்டணி விளம்பரப் பேனர்களில் இருந்து தனது புகைப்படம் அகற்றப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை என்று தனது வேதனையையும் வெளிப்படுத்தினார்.

“திமுக கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தற்போதுள்ள சூழலில் 120 தொகுதிகளில் புதிய தமிழகம் வலுவாக உள்ளது. அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும், இந்த நிமிடம் வரை 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடவே முழுமையாக ஆயத்தமாகி வருகிறோம்,” என அவர் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம், தொகுதிகளைத் தேர்வு செய்து தயாராகிவிட்டோமே தவிர, நாளை என்ன நடக்கும் என தெரியாது என்றார்.புதிய தமிழகம் கட்சியைப் புறக்கணிக்க காரணம் என்ன என அதிமுகவிடம் கேளுங்கள் என்று கூறினார். மேலும், “பட்டியல் வெளியேற்றம் என்ற ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி மட்டும் ஒரு அரசியல் கட்சி செயல்பட முடியாது,” என்றார்.

குழப்பம் இல்லை

கூட்டணிக்காக காத்திருக்கின்றீர்களா ? அல்லது தனித்துப் போட்டியா? ஒரு தெளிவான நிலைப்பாடே தெரியவில்லையே ? எல்லாரையும் குழுப்புகின்றீர்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எந்த குழப்பமும் இல்லை , நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share