ராஜபாளையம் – கோயிலுக்குள் கொலை… என்ன நடக்கிறது தமிழகத்தில்?

Published On:

| By Kavi

ராஜபாளையம் கோயிலில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் , பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த கோயிலில் இரவு காவலாளிகளாக உள்ளூரைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் சங்கர பாண்டியன் இருவரும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 11) காலை இவர்கள் வீடு திரும்பவில்லை. இந்தசூழலில் காலையில் கோயிலை திறக்க வந்தவர்கள், பேச்சிமுத்து மற்றும் சங்கர பாண்டியன் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, தகவலறிந்து வந்த கோயில் நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் கோயில் பிரதான கதவை மூடி விசாரணை நடத்தினர். 

இதில் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு இருவரும் கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்தசூழலில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி கண்ணன் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த கொலை குறித்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலை பணம், நகை திருட்டுக்காக நடந்ததா அல்லது பழிவாங்கலா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த இரட்டை கொலையை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு. ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருக்கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. திருச்சியில் நேற்று காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஒருவரை வன்முறை கும்பல் படுகொலை செய்தது. அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்குள் புகுந்து காவலர்களை கொள்ளையர்கள் படுகொலை செய்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம்… திமுக ஆட்சியில் எத்தகைய குற்றத்தையும் செய்யலாம்; அதற்காக எந்த தண்டனையும் தங்களுக்கு கிடைக்காது என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது தான். தமிழ்நாட்டில் காவல்துறையின் தோல்விக்கு முழு முதல் காரணம் அத்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையால் இப்போதும் அதே திறனுடன் செயல்பட முடியும். ஆனால், திறமையான அதிகாரிகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு காரணம் ஆகும்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை குற்றங்கள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share