மகாராஷ்டிராவின் மும்பை மாநகரம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதை பொருட்படுத்த வேண்டாம் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனவரி 15-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது, ”மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதி அல்ல.. சர்வதேச நகரம்.. ” என அண்ணாமலை பேசினார்.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டி உத்தவ் தாக்கரே சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்தார். அத்துடன் தமிழர்களை மகாராஷ்டிராவில் இருந்து பால்தாக்கரே விரட்டி அடித்ததை நியாயப்படுத்தி பேசினார் ராஜ்தாக்கரே.
மேலும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ”மும்பைக்குள் அண்ணாமலை கால் வைத்தால் கால்களை வெட்டுவோம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு அண்ணாமலை பதிலளித்திருந்தார். “மும்பைக்கு நான் வருவேன்.. முடிந்தால் என் கால்களை வெட்டிப் பாருங்கள்” எனவும் அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.
இதனிடையே, “அண்ணாமலைக்கு இந்தி மொழி சரியாக தெரியாது.. அவரது பேச்சை சீரியசாக எடுத்துக் கொண்டு மகாராஷ்டிரா தலைவர்கள் பேச வேண்டாம்” என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரத்தில், மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களும் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
