தமிழகத்தில் ஆட்சி மாற்ற அலை வேகமாக இருக்கிறது : திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை!

Published On:

| By Kavi

சிலிண்டர்கள் தட்டுப்பாடுகள் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் என்.டி.ஏ பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 11) மாலை நடைபெற்றது. இதில் என்.டி.ஏ கூட்டணி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பேசினர். 

ADVERTISEMENT

அவர்களை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,   “தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்” என தமிழில் பேசினார்.

திருச்சி நகரிலே உங்கள் அனைவருக்கும் இடையே நான் இங்கே இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறிய மோடி, “நம் அனைவருக்கும் நல்லாசிகள் அருள நான் எல்லாம் வல்ல மலைக்கோட்டை விநாயக பெருமானிடத்திலும் சமயபுரம் மாரியம்மன் இடத்திலும் வேண்டிக்கொள்ளுகின்றேன்” என்று கூறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் வந்ததை நினைவு கூர்ந்தார்.

ADVERTISEMENT

மேலும் அவர், “ திருச்சி நெஞ்சுரம் மற்றும் நம்பிக்கை நிறைந்த நிலம். மருது சகோதரர்களின் தைரியத்தை பார்த்த பூமி. கார்கில் போரின் போது தனது உயிரையே தியாகம் செய்து போரிட்ட மேஜர் எம் சரவணனை நான் நினைவு கூறுகிறேன். தமிழ்நாடு மற்றும் அதன் கலாச்சாரத்திற்கு மதிப்பளிப்பதில் நம்முடைய அரசாங்கம் எப்போதுமே முன்னணியில் இருக்கும். தமிழ்நாட்டின் மைந்தன் சி.பி ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருக்கிறார். சில மாதங்கள் முன்பாகத்தான் பேரரசர்பெரும்பிடுகு முத்தரையர் பெருமைப்படுத்தும் வகையிலே அஞ்சல் தலை ஒன்றினை அவர் வெளியிட்டார்.

மாநிலத்தின் நாடி துடிப்பை என்னால் தெளிவாக கணக்கிட முடிகின்றது ஆடி மாதத்திலே காவிரி நதி தீவிர சக்தியோடு பயணிக்கின்றாள் அதேபோல தமிழ்நாட்டின் இந்த தேர்தல் காலத்திலும் கூட மாற்றத்திற்கான ஆசை பெரும் வேகத்தை நோக்கி விரைந்து பயணிக்கின்றது ஆட்சி அதிகாரத்திலிருந்து திமுகவை தூக்கி எறிய மொத்த மாநிலமும் தீர்மானித்து விட்டது. ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல மாநிலத்தின் அனைத்து குடும்பங்களுக்காகவும் செயல்படும் அரசையே மக்கள் விரும்புகின்றார்கள். தமிழ்நாட்டிலே  என்டிஏவால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் கலாச்சாரமும் கட்டிடவியலும் உலகெங்கிலும் இருந்தும் மக்களை கவர்ந்து இழுக்கின்றன. இத்தகைய மக்கள் சென்னை வழியாக மட்டுமே வருவதில்லை. அவர்கள் சர்வதேச விமான நிலையமாக இருக்கும் திருச்சிராப்பள்ளி போன்ற இடங்கள் வழியாகவும் வருகின்றார்கள். திருச்சியில் நமது அரசாங்கம் புதிய முனையம் ஒன்றை கட்டிய பிறகு பலர் தங்களுடைய சந்தோஷத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

நவீனமாக இருக்கும் அதே வேளையில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் தோய்ந்து போயிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.  இப்போது நாம் மதுரை விமான நிலையம் தொடர்பாகவும் ஒரு பெரிய தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றோம். மாநிலத்தின் மிக பழமையான விமான நிலையங்களில் ஒன்று மதுரை. தென்தமிழகத்தின் முக்கியமானது ஒரு நுழைவாயிலாக விளங்குகிறது மதுரை.

இப்போது நமது அரசாங்கம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்தி இருக்கின்றது. இப்படி செய்வதன் வாயிலாக மதுரையின் வாயிற்படிக்கே உலகத்தை நாங்கள் கொண்டு சேர்த்திருக்கின்றோம். இதன் காரணமாக பல முக்கியமான உலக நகரங்களிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து அந்த நகரங்களுக்கும் நேரடி விமான போக்குவரத்து உருவாகும். ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களும் சுற்றுலா பயணிகளும்,  வணிகர்களும் மதுரைக்கு செல்வதை சுலபமாக உணர்வார்கள். மேலும் இதன் விளைவாக விவசாயிகளும் வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை தேசம் நெடுகவும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும். விவசாயிகளால் காலையில் பறிக்கப்படுகின்ற மதுரை மல்லி பாரிஸ் நகர் அல்லது நியூயார்க் நகரின் கடைகளுக்கு அன்று மாலைக்குள் கொண்டு சேர்க்கப்படும்.

என்டிஏ அரசாங்கத்தை பொறுத்தமட்டிலே தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமானது. 2014ஆம் ஆண்டு தொடங்கி மூன்று லட்சம் கோடி ரூபாய் நிதிப்பகிர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இது கடந்த காங்கிரஸ் திமுக அரசாங்கம் அளித்த நிதியை விட பல பல மடங்கு அதிகம் .கடந்த பத்தாண்டிலே உள் கட்டமைப்பு நிதிக்கு அதற்கு முந்தைய பத்தாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு அதிகமாகி இருக்கின்றது.  மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சுமார் 57,000 கோடி ரூபாயை என்டிஏ அரசாங்கம் செலவு செய்திருக்கின்றது,

2004, 2014ஆம் ஆண்டு காலத்திலே காங்கிரஸ் திமுக அரசாங்கம் செலவு செய்த தொகையை விட இது 4 மடங்கு அதிகமானது. தமிழ்நாட்டிலே கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாய் தொகையை நாம் ஊரக பகுதி சாலைகளிலே செலவு செய்திருக்கின்றோம். இது அவர்களுடைய ஆட்சிக்கால பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக அரசாங்கம் செலவு செய்ததை விட மூன்று மடங்கு அதிகமான தொகை.

 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தார்கள். ஆனால் திமுக என்ன செய்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை கடமையை நிறைவேற்றாமல், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு துரோகம் இழைத்தார்கள். திமுக ஆட்சியிலே அனைத்தும் ஒரு குடும்பத்திலிருந்து தொடங்கி ஒரே குடும்பத்துடனேயே முடிந்து போய்விடுகிறது, அமைச்சர்கள் மாறலாம் சட்டசபை உறுப்பினர்கள் மாறலாம், ஆனால் அதிகாரம் என்னமோ ஒரே ஒரு வம்சம் ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கும்.  விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக. இதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்று பெரிய மோசடியிலே சிக்கி இருக்கிறார்.

 சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் ஆறுகள் நாசமாகின்றன சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. ஆனாலும் இவற்றுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு திமுகவின் பாதுகாப்பு கவசம் இருக்கின்றது.

 ஊரக பகுதி ஏழைகளுக்கான வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை திமுக அரசு தாமதப்படுத்தி இருக்கிறது. ஏன் தெரியுமா… மக்கள் மத்திய அரசாங்கத்தை பாராட்டி விடுவார்களே என்ற பயம்தான்.

தமிழ்நாட்டிலே இன்று பெண்களின் நிலைமை என்ன? திமுக அரசாங்கத்திலே பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் வாடிக்கையாகிவிட்டன. அண்மையிலே ஒரு சிறுமியை கூட  திமுக உறுப்பினர் விட்டு வைக்கவில்லை. அவர் பற்றிய மோசமான செய்தியை நாம் அனைவருமே பார்த்தோம்.  பெண்களுக்கு தீங்கு ஏற்படுத்திவிட்டு பயமே இல்லாமல் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றார்கள். ஆனால் நான் உங்களிடத்திலே வாக்குறுதி அளிக்கிறேன்… மக்களே தமிழ்நாட்டின் பெண்கள் அச்சமோ பயமோ இல்லாமல் வாழ்வதை என்டிஏ உறுதி செய்யும். நாம் நல்ல சட்டம் ஒழுங்கை அளிப்போம் கு.ற்றவாளிகள்தான் பயத்திலே வாழ்வார்களே தவிர மக்கள் அல்ல. 

நான் தமிழ்நாட்டின் மக்களிடத்தில் மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பற்றி பேச விரும்புகிறேன் இது உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வழங்கல் சங்கிலிகளை பாதித்திருக்கிறது. இந்தியாவுக்கே முதன்மை என்ற கொள்கையிலே நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட இந்தியர்களின் நலன்களுக்கே முதன்மை அளிப்பது நமது அரசாங்கம் செய்து வந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்த சூழ்நிலையிலும் கூட நமது அணுகுமுறை அதே மாதிரிதான் இருக்கும். நீங்கள் யாரும் பயப்பட தேவையில்லை.

பீதி அடைய தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். நாம் சரியான தகவலை மட்டுமே பரப்ப வேண்டும். சரி பார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பரப்புரை செய்ய வேண்டும். என்று மக்களே நான் உங்களிடத்திலே வேண்டி கேட்டுக்கொள்கிறேன். கோவிட் பெருந்தொற்று காலத்திலே நாம் எப்படிப்பட்ட முதிர்ச்சியுடைய தேசம் என்பதை 140 கோடி இந்தியர்கள் உலகிற்கு எடுத்துக் காட்டினார்கள். ஒரு தேசம் என்ற வகையிலே ஒவ்வொரு சூழ்நிலையையும் நாம் வெற்றிகரமாக கடந்து நாம் கடந்து செல்வோம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

தமிழ்நாட்டின் வரலாற்றிலே வரவிருக்கும் சட்ட பேரவை தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது.  மக்கள் முன்பாக இருக்கும் தேர்வு தெளிவாக இருக்கின்றது.  ஊழல் வம்சாவழி அரசியல்,  பொய்யான வாக்குறுதிகளை நோக்கி ஒரு பாதை…  வளர்ச்சி வாய்ப்பு நாணயமான ஆளுகை ஆகியவற்றை நோக்கி இன்னொரு பாதை அழைத்துச் செல்லுகிறது.

மக்களிடம் ஆழமான அறிவு இருக்கிறது. அதன்மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். திருச்சி மக்களே, உங்கள் குரல் மாநிலமெங்கும் எதிரொளிக்க வேண்டும். தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு என்டிஏவை விரும்புகின்றது” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share