கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் 95 சதவிகிதம் வரை தொற்று நோய் இல்லை என்பதால் பெரிய அளவில் பதற்றப்படவேண்டியது இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று (ஆகஸ்ட் 28) கூறுகையில், ”கேரளாவில் 18 பேர் மூளையை தின்னும் அமீபா நோய் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக நோயின் தாக்கம் அங்கு அதிகரித்துள்ளது. கேரளாவில் உள்ள மாசுபட்ட குளம், குட்டைகளில் உள்ள நீரில் குறிப்பாக சேற்றில் இந்த அமீபா உருவாகும் என கூறப்பட்டுள்ளது. அந்த நீரில் குளிக்கும் போது மூக்கின் வழியே அமீபாக்கள் போய் மூளைக்கு சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் மரணம் ஏற்படுகிறது. இது 95 சதவிகிதம் வரை தொற்று நோய் அல்ல. அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று பதற்றமடைய தேவை இல்லை.
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்துவலி, மனக்குழப்ப நிலை, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. உடனடியாக கேரள சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்று பதற்றமடைய தேவை இல்லை. இது தொற்று நோய் அல்ல. இருந்தாலும் தமிழகத்திலும் மாசுபட்ட குளம், குட்டைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. பண்ணை வீடுகளில் நீண்ட நாட்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நீச்சல் குளங்களை தூய்மைப்படுத்தி குளிப்பது நல்லது. இதனால் பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.