2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தங்களது கட்சியினருடன் ஆலோசனை, கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரங்கள் என இறங்கியுள்ளன.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலார்கள் கூட்டம் இன்று காலை (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.

காலை 11.20க்கு தொடங்கிய கூட்டம் 12.30க்கு முடிந்தது. மொத்தம் 50 நிமிடங்கள் நடந்த கூட்டத்தில் சில விசயங்களை கடுமையாகவும், சில விசயங்களை மகிழ்ச்சியாகவும் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
குறிப்பாக பூத் கமிட்டி விசயத்தில் கடுமை காட்டிய அவர், தனது ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை பற்றி மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் மக்கள் குறைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே சுற்றுப்பயணத்தை இன்னும் தீவிரமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.
மேலும், ”உங்கள் மாவட்டங்களில் சிறுசிறு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இருந்தால், அவர்களை விடாமல் ஒன்றிணையுங்கள். மக்கள் பிரச்சனைகள எடுத்து தெருமுனை கூட்டங்கள் நடத்துங்கள். ஆளுங்கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்துங்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் மாவட்டத்தில் பெரிய பிரச்சனையாக இருந்தால், எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் வருகிறேன்.
நம்முடன் கூட்டணியில் உள்ளவர்களை யாரையும் விமர்சிக்க வேண்டாம். அவரவர் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் ஒன்றிணைந்து செயல்படுங்கள். அவசரப்பட்டு அண்ணாமலையை இனி யாரும் விமர்சித்து பேசக்கூடாது. அதேபோல் விஜய் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கிறார். அவர் பேசுவதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எந்த காரணத்தைக் கொண்டும் விஜய்யை விமர்சிக்க வேண்டாம்” என அழுத்தமாக கூறியிருக்கிறார்.

இப்படி விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என வாயடைத்ததால், அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்கிறார்கள் மாவட்ட செயலாளர்கள்.
அதுமட்டுமின்றி அண்ணாமலையையும் விமர்சிக்க கூடாது என்று கூறியதற்கு பின்னால் அமித் ஷாவின் நெல்லை வருகையும் காரணமாக கூறுகின்றனர் அதிமுகவினர்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த நிலையிலும் கடந்த சில மாதங்களாக ‘கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு’ என பேசி வந்தார் அண்ணாமலை. அதற்கு அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பதில் கொடுத்தார் எடப்பாடி. அதனைத் தொடர்ந்து அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் காட்டமாக விமர்சித்து வந்தனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்தது.
ஆனால் அமித் ஷா வருகை தந்த நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் “2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கட்சி தொண்டர்களின் கடமை என அண்ணாமலை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின்னர் நடக்கும் கூட்டங்களில் எல்லாம் ‘எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்’ என்பதை அழுத்தமாக கூறி வருகிறார் அண்ணாமலை. இன்று நடைபெற்ற மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் கூட எடப்பாடியின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்த அண்ணாமலை, அவருடன் கைகுலுக்கி சிரித்து பேசினார். மேடையில் அவர் பேசும் போது, எடப்பாடியை ’அண்ணன்’ என்று குறிப்பிட்டதுடன், ”இங்கு வந்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறார் என்று குறிப்பிட்டீர்கள். அந்த மாற்றம் வர வேண்டும்” என பேசியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தான் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் அண்ணாமலையை யாரும் விமர்சிக்க வேண்டாம் என கண்டிப்பாக கூறியுள்ளார் எடப்பாடி என்கின்றனர் அதிமுகவினர்.