ADVERTISEMENT

‘தரமான பண்புடன் செயல்பட்ட முதல்வர்’ : வேலுசாமிபுரத்தில் கமல்ஹாசன் பேட்டி!

Published On:

| By Kavi

போலீசாருக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் அவர்களை குற்றம் சொல்ல வேண்டாம் என்று கரூரில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்

ADVERTISEMENT

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

இந்த சூழலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று (அக்டோபர் 6) கரூருக்கு சென்றார். 

ADVERTISEMENT

முதலில் வேலுசாமிபுரத்தில் காலணிகள் சிதறி கிடக்கும் இடத்துக்கு சென்று பார்வையிட்ட கமல்ஹாசன், சற்று நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். 

அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் சென்றுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனை பார்க்க வேலுசாமிபுரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘நான் இப்போது துக்கம் விசாரிக்க வந்திருக்கிறேன்.  இது குறை நிறை சொல்லக்கூடிய நேரமில்லை. 

எல்லோரும் நிறைய பேசி விட்டார்கள். அந்த மேம்பாலம் பகுதியில் அனுமதி கொடுக்காமல் இந்த பகுதியில் அனுமதி கொடுத்ததற்கு நன்றி தான் சொல்ல வேண்டும். 

இந்த விஷயத்தில் தரமான பண்புடன் முதல்வர் செயல்பட்டு உள்ளார். தலைமை எப்படி செயல்பட வேண்டும் என்று அனைத்து குணாதிசயங்களையும் காட்டி இருக்கிறார்” என்றார். 

அவரிடம் இந்த சம்பவத்துக்கு, அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு அவர் எந்த அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். என்ன நடந்தது என்று தற்போது நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எல்லோரும் கஷ்டப்படும் இந்த நேரத்தில் அது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்க வேண்டாம். பத்திரிகையாளர்கள் நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதால் தான் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. போலீசாருக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரத்தில் அவர்களை குற்றம் சொல்ல வேண்டாம். இந்த பக்கம், அந்த பக்கம் என எதுவும் சொல்லாதீர்கள். மக்கள் பக்கம் நில்லுங்கள். நல்லவேளை அந்த ஆற்றுபகுதியில் இடம் கொடுக்கவில்லை. விரைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி’ என கூறினார்.

விஜய்க்கு உங்கள் அட்வைஸ் என்ன என்ற கேள்விக்கு ‘அதை நீதிமன்றத்தில் சொல்வார்கள்’ என பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share