இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலும் 25% வரியை விதிப்பதாக அறிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக கடுமையாக வரி விதித்து வருகிறார். அண்மையில் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25% உயர்த்தினார் டொனால்ட் டிரம்ப்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இதனால் இந்திய பொருட்கள் மீது மேலும் 25% வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் மீது மொத்தம் 50% வரி விதித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
இத்தகைய கொடூரமான வரி விதிப்புகளால் ஜவுளி உள்ளிட்ட இந்திய தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் இந்த கூடுதல் வரிவிதிப்பு துரதிருஷ்டவசமானது; நாட்டின் நலனைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.