மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ரத்தானது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தார். அதில் 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும், குல விளக்கு திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பொய் சொல்லியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடலாம் என்ற முறையில் தான் முதல் தவணை பொய்களை வாக்குறுதிகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். வழக்கமாக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு என ஒரு குழு அமைத்து, ஒரு முழுமையான அறிக்கையைத் தான் தேர்தல் வாக்குறுதி என்று இதுவரை வெளியிட்டார்கள். இப்போதுதான் பழனிசாமி தவணை முறையில் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது என்ற புதிய நடைமுறையை உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
அதில் அவர் மிக முக்கியமான வாக்குறுதியாக சொல்லியிருப்பது, 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக பாஜக ஆட்சி கொண்டு வந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தால் 150 நாட்களாக அந்த வேலை நாட்களை உயர்த்துவோம் என கிராமப்புற மக்களை ஏமாற்றுகின்ற ஒரு வாக்குறுதியை அவர் கொடுத்துள்ளார்.
முதலில் 100 நாள் வேலைத் திட்டம் என்ற சட்டமே இப்போது நடைமுறையில் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என்பதை ஒன்றிய பாஜக அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு தான் இப்போது விபி ஜிராம்ஜி என்ற புதிய சட்டத்தை அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். இந்த புதிய சட்டத்தில் தான் 125 நாட்கள் வேலை வழங்குவோம் என்ற ஏமாற்று வாக்குறுதியை அவர்கள் கொடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே இருந்த சட்டத்தில் கட்டாயம் ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும்; அப்படி வேலை கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் வேலையில்லா காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அந்த சட்டத்தில் இருந்தது. ஆனால் அப்படியான எந்த உத்தரவாதமும் இல்லாமல் இப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் நிதி இருந்தால் வேலை கொடுக்கலாம்; இல்லை என்றால் வேலை கொடுக்க மாட்டார்கள்.
இத்தகைய நிலையில் நாங்கள் வந்தால் 150 நாட்களாக மாற்றுவோம் என்று அவர் சொல்லியிருப்பது, தமிழக கிராமப்புற உழைப்பாளி மக்களை ஏமாற்றுகின்ற ஒரு வாக்குறுதி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த சட்டம் ரத்தானது முதலில் அவருக்கு தெரியுமா, தெரியாதா? புதிய சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துதான் அவர் பேசுகிறாரா என்று நான் கேட்கிறேன்.
புதிய சட்டத்தில் 60 சதவிகித நிதியை மட்டும் தான் மத்திய அரசு தரும்; 40% நிதியை மாநில அரசாங்கங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உள்ளது. ஏற்கனவே கட்டாயம் என்று இருந்தபோதே போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் 30 நாள் முதல் 40 நாட்கள் என்பது தான் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த காலங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கட்டாயம் இல்லாதபோது அவர்கள் எப்படி 125 நாட்கள் தருவார்கள்?
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்று அந்த காலத்தில் சொன்னது போல், ஆயிரம் பொய் சொல்லி ஆட்சியை பிடிக்கலாம் என்கின்ற ஒரு புதிய பழமொழியை நடைமுறையில் சாத்தியமாக்கிக் காட்டியிருப்பவர் மோடி அவர்கள். மோடியோடு எடப்பாடி சேர்ந்து வருவதால் இவரும் எத்தனை பொய்களைச் சொல்லியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடலாம் என்ற நோக்கத்தோடு தான் இத்தகைய வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே கருப்புப் பணத்தை எல்லாம் கைப்பற்றி ஒவ்வொருவரின் அக்கவுண்டிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார் மோடி. 2014 ஆம் ஆண்டு இத்தகைய வாக்குறுதியை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் கடந்த 11 ஆண்டு காலமாக கருப்புப் பணம் கைப்பற்றாதது மட்டுமல்ல, ஏற்கனவே இருந்ததை விட கருப்புப் பணத்தின் அளவு உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்த கருப்புப் பணத்தையும் அவர் கொண்டு வரவில்லை; உள்நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தையும் அவர் பிடிக்கவில்லை. மேலும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதுதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் செய்தியாக உள்ளது.
இது போன்ற பொய்களைச் சொல்லி ஆட்சியை பிடித்தவரோடு கூட்டு சேர்ந்திருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் பொய் சொல்லியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடலாம் என்ற முறையில் தான் முதல் தவணை பொய்களை வாக்குறுதிகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆகவே தமிழ்நாட்டு மக்கள் உஷாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
