மத்திய பிரதேசத்தின் சிந்துவாரா மாவட்டத்தில் இருமல் மருந்தை குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராஜஸ்தானின் சிகாரிலும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் உள்ளிட்ட சில மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருமல் மருந்து பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் மத்திய பிரதேசத்தின் பாராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவர் பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவர் கவனக்குறைவாக கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்ததால் குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள கோல்ட்ரிப் மருந்து தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கோல்ட் ரிஃப் இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கோல்ட்ரிப் இருமல் மருந்தில் பிரச்சினைகள் இருப்பதாக பிற மாநிலங்களிலிருந்து வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த இருமல் சிரப் விற்பனையை மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு துறை நிறுத்தி வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.