இன்றைய தேதியில் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிற நட்சத்திரக் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவராகத் திகழ்பவர் பகத் பாசில். ‘ஃபாஃபா’ என்பது ஜென்ஸீ தலைமுறை ரசிகர்கள் இவருக்கு வைத்த செல்லப்பெயர். கல்யாணி பிரியதர்ஷன் உடன் பகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிரா சாடும் குதிரா’ ஓணம் வெளியீடாக வரவிருக்கிறது. அதன் டீசர் சமீபத்தில் வெளியானது.
தமிழில் வடிவேலு உடன் அவர் நடித்த ‘மாரீசன்’ திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், ஆரம்ப காலத்தில் பகத் பாசில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்.
’கையெத்தும் தூரத்’ படத்தின் ஹீரோவாக அறிமுகமான பகத், சுமார் ஏழாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் ‘கேரளா கஃபே’, ‘பிரமணி’, ‘காக்டெய்ல்’ உள்ளிட்ட படங்களில் தலைகாட்டினார்.
பகத் பாசிலுக்குப் பெரியளவில் பெயர் வாங்கித் தந்த படம் ‘சப்பா குரிஷு’. இதில் வினீத் சீனிவாசன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சமீர் தாஹிர் இயக்கிய இப்படம் தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
அந்தப் படத்தில் ஒரு ‘நெகட்டிவ்’ பாத்திரத்தில் நடித்திருந்தார் பகத். அதற்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இத்தகவலைத் தெரிவித்தவர், ‘அந்த படத்துக்காக ரொம்ப கடினமா பகத் உழைச்சதை பார்த்தேன். அவர்கிட்ட உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்டேன். அப்போ, நீங்க கொடுக்கறதைக் கொடுங்கன்னு சொன்னார். நான் வற்புறுத்திக் கேட்டபிறகு, தான் நடிச்சிட்டிருக்கிற ‘டர்னமெண்ட்’ படத்துக்காக 65,000 ரூபாய் வாங்கினதா சொன்னார். அதுக்கப்புறம் தான் நான் லட்சம் ரூபாய் சம்பளம் பிக்ஸ் பண்ணேன்” என்றிருக்கிறார்.
“அன்னைக்கு ’சப்பா குரிஷு’ படத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் தான் கொடுத்தேன். இன்னிக்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை கொடுத்தாலும், அவரைப் பார்க்க முடியாத நிலைமை இருக்குது. இதுதான் சினிமா” என்று கூறியிருக்கிறார் லிஸ்டின்.
’ஹீரோ மட்டுமில்ல, ஒரு படம் ஹிட் ஆனால் புரொடியூசர் நிலமையும் அப்படித்தானே’ என்று ‘கமெண்ட்’ அடிப்பவர்களிடம் இவர் என்ன பதில் சொல்வாரோ?!