தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மாணவர் அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக மாணவர் அணியின் புதிய செயலாளராக ஜெ. வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் அணியின் முதல் பெண் செயலாளர்
திமுக மாணவர் அணியின் துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஜெ. வீரமணி, தற்போது மாணவர் அணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் திமுக மாணவர் அணியின் வரலாற்றிலேயே செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ராஜீவ் காந்திக்கு புதிய பதவி
இதுவரை மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த இரா. ராஜீவ் காந்தி, அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவருக்குக் கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை மறுதினம் காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
