சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சுப்பராயன் மணி மண்டப கட்டுமானம் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக விஜய் குற்றச்சாட்டுக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகில் மக்களை சந்தித்து அப்போது பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்திற்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எண்களுடன் பட்டியலிட்டு, அதை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதன்படி, “தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதில் சென்னை மாகாணத்துக்கு முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராயனுக்கு பெரும் பங்குண்டு. அதுதான் Communal G.O 1071 கொண்டு வந்து பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கினார். அதனால்தான் அவரை ‘முதல் தமிழர்’ என்று சொன்னது மட்டுமில்லாமல், இதே நாமக்கலில் மணிமண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதி எண் 456 கொடுத்தது யாரு? சொன்னாங்களே செஞ்சாங்களா?” என விஜய் கேள்வி எழுப்பியிருந்தார்.

இனியாவது சரியாக எழுதிக் கொடுங்க!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக மாநிலங்களவை எம்.பி ராஜேஷ்குமார் பேசுகையில், “நாமக்கலில் பேசிய விஜய், திமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் அவருக்கு சரியாக எழுதிக் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நாம் நிறைவேற்றி வருகிறோம். அதில் குறிப்பிட்டவாறு சுப்பராயன் பிறந்த சொந்த ஊரான புதுச்சத்திரத்தில் மணிமண்டபம் கட்டும் பணி 90% முடிந்துவிட்டது. விரைவில் திறப்புவிழா நடைபெற இருக்கிறது. இதன்பிறகாவது விஜய்க்கு எழுதிக் கொடுப்பவர்கள் சரியாக எழுதிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திறப்பு விழாவிற்கு தயார்!
இதுதொடர்பாக திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என விஜய் ‘கீச்சி’ட்டுள்ளார்…
கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப.சுப்பராயனுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது” எனக்கூறி அதற்கான புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.