திமுகவின் கோவை மாநகர மாவட்ட செயலாளராக 8 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்த நா.கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார். . அவருக்கு பதிலாக திமுக கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளராக பீளமேடு பகுதிச் செயலாளர் செந்தமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட திமுக தெற்கு, வடக்கு, மாநகரம் என பிரிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்த நாச்சிமுத்து, தென்றல் செல்வராசு, மருத்துவர் வரதராஜன் ஆகியோர் மாற்றப்பட்டு தற்போது தளபதி முருகேசன் பதவி வகித்து வருகிறார்.
கோவை வடக்கு மா.செ.வாக இருந்த ராமச்சந்திரன் மாற்றப்பட்டு தொண்டாமுத்தூர் ரவி நியமிக்கப்பட்டார்.
ஆனால் கோவை மாநகர மா.செ.வாக நா. கார்த்திக் மட்டுமே சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்தார். தற்போது நா. கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார்.
திமுகவின் கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளராக செந்தமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் கோவை மாநகர மா.செ. பதவியில் இருந்து நா. கார்த்திக் மாற்றப்பட்டதைக் கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்களை திமுக நிர்வாகிகளே பகிர்ந்து வருகின்றனர்.
இதுபற்றி கோவை மாநகர மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, கோவை மாநகர மா.செ. கார்த்திக் மட்டும்தான் மாற்றப்படாமல் இருந்தார். நா. கார்த்திக் தமது அணுகுமுறையாலும் நடவடிக்கையாலும் மா.செ. பதவியை பறிகொடுத்திருக்கிறார். தமக்கு கட்சியில் பிடிக்காத நிர்வாகிகளை ஓரம்கட்டுவதில் முனைப்பாக இருந்தார். கோவை மாமன்ற உறுப்பினராக- மணடல குழு தலைவர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் மனைவி இலக்குமி இளஞ்செல்வியின் ‘ஆதிக்க’ மனோபாவமும் திமுகவினரை ரொம்பவே முகம் சுளிக்க வைத்து வந்தது. நா. கார்த்திக், தொடர்ந்து பதவியில் நீடிப்பதால் மாநகர திமுகவில் கணிசமானோர் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கும் நிலையும் இருக்கிறது என அறிவாலயத்துக்கு புகார்களும் சென்றன. இதனால் தற்போது மா.செ. பதவியை பறிகொடுத்து நிற்கிறார் நா. கார்த்திக் என்கின்றனர்.
மேலும், தற்போதைய கோவை மாநகர புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் செல்வன், பீளமேடு பகுதிச் செயலாளர். திமுகவில் ஜூனியர் என்பதைவிட சப் ஜூனியர் என்ற அளவுக்கு அதிகமாக அறிமுகம் இல்லாதவர். கோவை மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் பீளமேடு வீடு பகுதியிலேயே வசிப்பவர் செந்தமிழ்ச் செல்வன். இதனால் எப்போதும் செந்தில் பாலாஜியுடனேயே இருக்கக் கூடியவர். இருந்தாலும் செந்தமிழ்ச் செல்வனால் மாநகர பொறுப்பாளர் என்ற பதவியை தாங்க முடியுமா? என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலுடன் இளையவரான செந்தமிழ்ச் செல்வன் கட்சியினர் அனைவரையும் அரவணைத்துச் சென்று புதிய முன் மாதிரியாக இருந்தால் கட்சிக்கும் நல்லதுதானே என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.