பிரதமர் மோடி இன்று (ஜூலை 26) தமிழகம் வரும் நிலையில், கீழடி குறித்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்று, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீழடி தொடர்பான ஏஐ வீடியோவை திமுக தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், ‘புதைந்து கிடந்த எங்கள் நாகரீகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக் கொண்டு வந்தார்கள். கீழடி நாகரீகம் வெளிவர, தமிழனின் உயர்ந்த தொன்மையான நாகரீகத்தை உலகம் அறிய தொடங்கியது. ஹரப்பா மற்றும் மொகஞ்சாதரோவுக்கு இணையான தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரீகம் இருந்தது என்பதற்கு சான்றாக நம் கீழடி நாகரீகம் வெளிபட்டது.
இந்தியாவின் பழங்கால வரலாற்றையே திருத்தி எழுதி உள்ளது கீழடி. தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு. 300 என அனைவரும் நினைத்த நிலையில், கி.மு.600 என கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்தது. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது கீழடி மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
உலகின் மூத்த நாகரீகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொன்மத்தை அங்கீகரித்தன. பல்வேறு சிறப்புகளை கொண்ட கீழடி நாகரீகத்தை உலகமே உற்று கவனிக்கிறது. கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும்; தமிழர் வரலாற்றை ஒருநாள் உலகமே சொல்லும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோ பின்னணி என்ன?
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடாமல், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
எனினும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக் கோரி தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் பிரதமர் மோடி வரும் நிலையில், கீழடி குறித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக.