மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கண்டனப் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளது.
2026 இல் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தென் மாநில எம்பிக்கள் கூட்டுக் குழு அமைக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். DMK public meeting on March 12
இதையடுத்து நேற்று (மார்ச் 7) நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசை கண்டித்து திமுக கண்டன பொதுக்கூட்டம் அறிவித்துள்ளது.
திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக சார்பில் மார்ச் 12ஆம் தேதி “தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் ஒன்றிய அரசுக்கு எதிரான பொதுக்கூட்டங்கள் அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்கள் சார்பிலும் நடைபெறும். DMK public meeting on March 12
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம்மை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கும் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாகவும், முன்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரியவைக்கும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் நேரு ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.