சட்டமன்ற தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் சேருவது தொடர்பான முடிவை தேமுதிக தள்ளி வைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜனவரி 5-ந் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் துண்டு சீட்டு கொடுத்து கருத்து கேட்டார் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக மாவட்ட செயலாளர்களில் 60% திமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் 40% அதிமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் கூறியிருந்தனர்.
இதனடிப்படையில் கடலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் இறுதி முடிவை அறிவிக்கப் போவதாகவும் பிரேமலதா கூறியிருந்தார்.
ஆனால் தற்போது, வங்க கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி தேமுதிகவின் கடலூர் மாநாடு ஜனவரி 9-ந் தேதி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், “தேமுதிக மாநாட்டை பொங்கலுக்கு பின்னர் நடத்தலாம் என பிரேமலதா ஆலோசித்து வருகிறார். அதனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்கிற தேமுதிக முடிவும் பொங்கலுக்கு பின்னரே அறிவிக்கப்படும்” என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
