வேகமெடுக்கும் டிலிமிட்டேஷன்… ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா செல்லும் திமுக குழு!

Published On:

| By Selvam

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக திமுக எம்.பி, அமைச்சர்கள் குழு ஒடிசா, கர்நாடகா, தெலங்கானா சென்று அம்மாநில முதல்வர்களை சந்திக்க உள்ளனர். dmk mps other state

கடந்த மார்ச் 9-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது வருகிற மார்ச் 22-ஆம் தேதி தொகுதி மறுவரையறை தொடர்பாக நடக்கவுள்ள கூட்டத்தில் ஏழு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக திமுக எம்.பி-க்கள், அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில சிபிஐ(எம்) தலைவர் முகமது சாலி, ஆகியோரை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி , நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்திப்பார்கள்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ராஜ்யசபா எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆகியோர் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க உள்ளனர்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் காங்கிரஸ் தலைவர் பட்கா சரண் தாஸ் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளனர்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் ராஜ்யசபா எம்.பி. பி.வில்சன் ஆகியோர் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்க உள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்கும் பொறுப்பு வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் மற்றும் தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிற தலைவர்களை சந்திக்க உள்ளனர். ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்திற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் ராஜ்யசபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் கொண்ட குழுவை ஸ்டாலின் அமைத்தார்.

இந்தநிலையில், மார்ச் 11-ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஒடிசா செல்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா மற்றும் பொன்முடி ஆகியோர் மார்ச் 12-ஆம் தேதி கர்நாடகா செல்கின்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மார்ச் 13-ஆம் தேதி தெலங்கானா செல்கின்றனர். dmk mps other state

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share