கல்லறைத் திருநாள்- TET தேர்வு தேதியை மாற்ற இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On:

| By easwari minnambalam

DMK MLA requests to change TET exam date

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் கல்லறைத் திருநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (TET டெட்) தேதியை மாற்ற வேண்டும் என்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வரும் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும் என ஆகஸ்ட் 11ம் தேதி ஆசியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு வரும் செப்டம்பர் 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்டு தோறும் நவம்பர் 2ந் தேதி கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கும் கல்லறைத் திருநாள் என்பதால் தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான திருச்சி கிழக்கு தொகுதி சட்ட உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கல்லறைத் திருநாள் (All Souls Day) என்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு புனித நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ம் தேதி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வரும் நாள் தான் கல்லறைத் திருநாளாகும். அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையினை சுத்தம் செய்து மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் வைத்து இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபிக்கும் நாளாகும்.

கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான TNTET Exam 2025 என்கின்ற ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் தாங்கள், கல்லறைத் திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தரவேண்டும் என்று தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவர்களின் சார்பாக தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

எங்களது கோரிக்கையை எப்பொழுதும் கூர்ந்து கவனித்து செயல்படுத்தி வரும் தாங்கள் TNTET Exam 2025 ஆசிரியர் தேர்வு தேதியினை வேறு ஒரு நாட்களில் மாற்றி செயல்படுத்தி தருவீர்கள் என்று நம்பிக்கையோடு வேண்டுகோள் வைக்கின்றேன். இவ்வாறு இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share