இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக கருத்தியல் போர் நடத்தக் கூடிய ஒரே கட்சி திமுகதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்கு எதிராக ஐடியாலஜிக்கல் ஃபைட் கருத்தியல் போர் செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, தி.மு.க.,தான்! அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான்!
அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல்! அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்!
மாண்புமிகு அமித்ஷா அவர்களே! நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு! இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே…
அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்! மீண்டும் சொல்கிறேன். அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்!
இங்கு கூடியிருக்கும் இளைஞரணி தம்பிகளுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும்! அதற்கு ரியாக்ட் செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும்! மக்களும் மன்னிக்க மாட்டார்கள்! ஆனால், வரலாறு முன்வைக்கும் கேள்விகளை எதிர்த்து, ஃபைட் செய்து வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றவர்களை, மக்களும் மறக்க மாட்டார்கள்! வரலாறும் மறக்காது!
நீங்கள் எல்லாம் வரலாறு படைக்க வேண்டும்! அதற்கு எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக இருப்பதுதான் அரசியல்! அந்த அரசியலை செய்யத்தான், உங்கள் எல்லோருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது! மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் கூடவே வாழுங்கள். அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். இதுதான் உங்களுக்கான டாஸ்க்.. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
