காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருக்கிறது : மோடி முன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published On:

| By Kavi

காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் இன்று (மார்ச் 11) மாலை நடைபெற்ற என்.டி.ஏ. பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பேசிய என்.டி.ஏ-வின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி, “ இரண்டு நாளைக்கு முன்பு இதே திருச்சி மாநகரத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிலே நம்முடைய கூட்டணியைப் பற்றி இன்றைய முதலமைச்சர் விமர்சனம் செய்தார். ஸ்டாலின் அவர்களே, அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்து அற்புதமான கூட்டணியைத் தமிழகத்திலே அமைத்திருக்கின்றது. வலுமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி நம்முடைய கூட்டணி.

உங்களுடைய கூட்டணி பல்வேறு பிரச்சனைக்கு இடையிலும், பல்வேறு வார்த்தைப் போர்களுக்கு இடையிலும் தான் அமைந்தது. காங்கிரஸும் திமுக-வும் இன்றைக்குக் கூட்டணி அமைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 20 நாட்கள் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் வார்த்தைப் போர் நடத்தின. ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் வேண்டும் என்று தினம்தோறும் அறிக்கை…பல்வேறு விமர்சனங்கள்… அத்தனையும் தாண்டி கெஞ்சி காங்கிரஸிற்கு அடிமையாகி அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கின்றீர்கள்.

ADVERTISEMENT

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்றைக்கு ஒரு அற்புதமான கூட்டணி. எங்கள் கூட்டணியிலே பரஸ்பர உணர்வோடு நாங்கள் இணைந்திருக்கின்றோம். வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எறும்பைப் போல, தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். மீண்டும் தமிழகத்திலே ஒரு அற்புதமான ஆட்சியை அமைப்போம்.

நீங்கள் எத்தனை முறை எங்கே கூட்டம் போட்டாலும் நாட்டு மக்கள் உங்களை நம்பப் போவதில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகச் சுமார் 525 அறிவிப்புகள் வெளியிட்டீர்கள். 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்புக் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்தனையும் பொய். கவர்ச்சிகரமாகப் பேசி, கவர்ச்சிகரமாக அறிக்கை விட்டு, அந்தத் தேர்தல் அறிவிப்பை இதுவரை நடைமுறைப்படுத்தாத அரசாங்கம் திமுக அரசாங்கம். திமுக கட்சி… உங்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டார்கள்.

ADVERTISEMENT

தேர்தல் வந்தால் அறிவிப்பு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து. தேர்தல் முடிந்தால் அதோடு விட்டுவிடுவார்கள்” என்று விமர்சித்தார்.

மேலும் அவர், “ தமிழ்நாட்டிற்கும் என்.டி.ஏ-விற்கும் தான் போட்டி என்று ஸ்டாலின் சொல்கிறார். பாவம் மறந்து போய்விட்டார். அடிக்கடி மறதி ஸ்டாலினுக்கு, நடக்கப்போவது தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல். தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்கிற தேர்தல் இந்தத் தேர்தல். ஆகவே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான் எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய உங்களால் முடியவில்லை.

அதேபோல ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார், ‘எங்கள் கூட்டணியில் இருக்கிற அத்தனை பேருக்கும் ஒரே கொள்கை’ என்று. , திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கையும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றா? திமுக கொள்கையும் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் ஒரே கட்சியை அமைத்து விடலாம், தனித்தனி கட்சி தேவையில்லை. ஆக பல்வேறு கொள்கை உள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. ஆனால் ஸ்டாலின் அடிக்கடி சொல்வதெல்லாம், ஒத்த கொள்கையுடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்று சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சி திமுக கட்சி.

ஆக கூட்டணி வைப்பது இயல்பு. எல்லாக் கட்சியும் தேர்தல் நேரத்திலே கூட்டணி வைப்பது, வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையிலே, தமிழ்நாட்டு மக்களுடைய நலன் கருதி, தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும் என்ற அடிப்படையிலே, கொள்ளையடிக்கின்ற கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்திருக்கின்றது.

உங்கள் கூட்டணி அப்படி அல்ல. உங்கள் கூட்டணியை அமைக்கின்ற கட்சிகள் எல்லாம் அடிமையாக உங்களிடத்திலே இருந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குத் தமிழகத்திலே நிலவுகின்ற பிரச்சனை… இன்றைக்குப் போதைப்பொருள் விற்பனை, அதனால் மக்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம். பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள், தினந்தோறும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை, மூத்த மூதாட்டிகளுக்குக் கூட பாலியல் வன்கொடுமை. இப்படிப்பட்ட மோசமான அரசாங்கம் திமுக அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை அகற்றுவதுதான் எங்களுடைய கூட்டணியின் நோக்கம்.

அதே நேரத்திலே இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால் அது குடும்பக் கட்சி, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி அல்ல. அந்த குடும்பத்தில் இருக்கின்றவர்கள் தான் அந்த கட்சிக்குத் தலைவராக முடியும். அந்த குடும்பத்தில் இருக்கின்றவர் தான் ஆட்சி அதிகாரத்துக்கே வர முடியும். அப்படிப்பட்ட கட்சியைத் தமிழக மக்கள் இந்த முறை விரட்டியடிப்பார்கள். இது அந்த குடும்பத்திற்கு இறுதிக்கட்டத் தேர்தல். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழகம் முழுவதும் ஒரே குரல் – திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்கின்ற ஒரே குரல் இன்றைக்கு ஒலித்துக் கொண்டிருக்கின்றது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share