திமுகவின் தொடக்க காலங்களில் அமைக்கப்பட்டதைப் போல ‘திமுக இளைஞர் அணி மன்றங்கள்’ உருவாக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: சட்டமன்றம்-நாடாளுமன்றம் நுழையும் முன்பே, வீதி தோறும் மன்றங்கள் அமைத்து, அரசியல் கருத்துக்களைப் பரப்பி, மக்களுக்கு தொண்டாற்றிய பேரியக்கம், நம் தி.மு.கழகம். பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர்-இன்றைய தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வழியில், மீண்டும் மன்றம் அமைக்கும் மரபை தொடங்குவதில், பெருமைகொள்கிறது கழக இளைஞர் அணி.
மாவட்டம், மாநகரம், மாநிலம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய கழக அமைப்புகளில், இளைஞர் அணிக்கு ஏற்கெனவே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகள், நகர-பகுதி-பேரூர்-வட்டங்கள் மற்றும் அனைத்து பாகங்களிலும் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, இல்லந்தோறும் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து, அரசியல்மயப்படுத்தும் நோக்கில் , தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்கள் உத்தரவின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், தி.மு.க. இளைஞர் அணி மன்றங்கள் திறக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக்கான 30 இளைஞர் அணி மன்றங்களை, இன்று மாலை திறந்து வைக்க உள்ளோம். இளைஞர்கள், அரசியலும்-சமூகவியலும் பயிலும் கூடங்களாக, இளைஞர் அணி மன்றங்கள் நிச்சயம் விளங்கும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
