ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகம்.. காலந்தோறும் காங்கிரஸின் நம்பகமான கூட்டாளி!

Published On:

| By Mathi

DMK Congress Article

கவிஞர் இலக்கியா நடராஜன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

திராவிட முன்னேற்றக் கழகம் : நம்பகமான கூட்டாளி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆண்டு கால வரலாறு என்பது, இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாதது. தனித்துவமானது. தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த சிந்தனை மாற்றங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் அழுத்தமாக தாக்கத்தினைக் கொண்டுள்ளது. மாநில கட்சியாக தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தேசிய அளவில் திராவிட முன்னேற்றக் கழகம் செலுத்திய – உருவாக்கிய தாக்கங்கள் அளவில்லாதது.

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் காங்கிரஸ் உடனான நெருக்கமான உறவினை பேணி வந்திருக்கிறது. அது தேர்தல் நோக்கத்துக்கானதாக மட்டும் இருந்ததில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மை, ஆட்சி ஸ்திரத்தன்மை என ஜனநாயகத்தை காக்கும் தோழமையாகவும் இருந்துள்ளது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் தொடங்கி, இன்றைக்கு இந்தியா கூட்டணி என இந்திய ஜனநாயக இயக்கத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டாளியாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துப் பயணிப்பது வரை திராவிட முன்னேற்றக் கழகமும் – காங்கிரஸ் பேரியக்கமும் நம்பகமான கூட்டாளிகள் என்றால் மிகையில்லை.

காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் இருந்துதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் கால அரசியல் வரலாற்றை எழுத முடியும். அன்றைக்கு இருந்த காலச் சூழலில், எந்த அரசியல் கட்சியும் காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்துதான் மக்களை கவர முடியும். அது தவிர்க்க முடியாதது.

ஒரு கட்சியை எதிர்த்து தான் இன்னொரு கட்சி வளர முடியும். என்றாலும் , அன்றைய காலகட்டச் சூழலை கணக்கிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வருகை தவிர்க்க முடியாதது. காங்கிரசுக்கு மாற்றாக மக்களிடம் சென்றனர். காங்கிரஸ் கட்சி பிரதிநிதித்துவப்படுத்த தவறிய அல்லது பிரதிநிதித்துவப் படுத்த தாமதமான மக்கள் பிரிவினரை திமுக சென்று சேர்ந்தது. அந்த வகையில், மக்களை அரசியல் மயப்படுத்தியதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ADVERTISEMENT

அதுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க கால காங்கிரஸ் எதிர்ப்பு என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. அன்று, கொள்கையளவில் காங்கிரஸை எதிர் நிறுத்தினாலும் தோழமைபூர்வமாக காங்கிரஸ் உடன் பயணித்ததில் தி.மு.க முன்மாதிரி கட்சி. அப்படித்தான் இந்திய ஜனநாயக அரசியலுக்கு புதிய வரவாக திமுகவின் தொடக்கம் அமைந்தது.

தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியில் அன்றைய முக்கிய தலைவர்களான ராஜகோபாலாச்சாரியார், ஓமந்தூர் ராமசாமி, பெருந்தலைவர் காமராஜர், பக்தவச்சலம் என எல்லோருக்கும் எதிராகவும் அரசியல் களத்தில் அணி திரண்ட இயக்கம் தி.மு.க., அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக. அதேநேரத்தில் , தலைவர்களோடு நல்ல நட்பும், தோழமையும் கொண்டிருந்தனர் என்பது வரலாறு. அந்த கட்சியின் தலைவர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதி போன்றோர் காங்கிரஸ் தலைவர்களோடு நல்ல நட்பு பாராட்டியவர்கள். வழிகாட்டுதல்களைப் பெற்றவர்கள்.

ADVERTISEMENT

இரண்டு கட்சிகளுக்கும் இருந்த ஒரே நோக்கம், மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பது. தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்துவது என்பதுதான். அந்த வகையில் அன்றைய நாளிலும் சிறந்த அரசியல் பண்புகளைக் கொண்டிருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த கட்சியாக மாறிய போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையோடும் நெருக்கமான தோழமை பூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளது. இன்றும் அந்த நட்பு உறவும் பேணிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அரசியல் அமைப்பு, ஜனநாயகம் வலுப்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.



1967 ஆம் ஆண்டு, காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், 1971 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி காணவேண்டிய சூழல் அமைகிறது. காரணம், இந்தியாவில் நிலையான, ஸ்திரத் தன்மையான ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சாத்தியம் என உணர்ந்தது.

பகைமைகளை மறந்து

அன்னை இந்திராவை வரவழைத்து, ” நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக” என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்ததெல்லாம் திருப்புமுனைகள்.

1967 ஆம் ஆண்டுக்கும், 1979 ஆம் ஆண்டுக்கும் இடையில் தேசிய அரசியல் ஸ்திரத்தன்மை எவ்வளவு அவசியமானது என்கிற முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வந்ததை அறியலாம். அந்த வகையில் சிற்சில சமய சந்தர்ப்பங்கள் தவிர, காங்கிரசுடன் எல்லா நேரங்களிலும் சிறந்த அரசியல் அணுகுமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டுள்ளது.

அன்னை இந்திரா குறிப்பிட்டதுபோல “ கருணாநிதியை நம்பலாம், அவர் ஆதரித்தால் முழுமையாக ஆதரிப்பார், எதிர்த்தால் தீவிரமாக எதிர்ப்பார்” என்பார். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணுகுமுறை. அதுதான், அரசியல் கட்சியாக 75 ஆண்டுகளை தி.மு.கவை வலுவாக வைத்துள்ளது.

அன்னை இந்திரா அவர்களுக்கு பின்னர், தலைவர் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி அம்மையார், தலைவர் ராகுல் என அனைவரோடும் அரசியல் தாண்டி தோழமை கொண்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸ் அகில இந்திய தலைமையையை உரிய மதிப்புடன் , தேர்தல் நேரங்களில் உரிய உரிமையுடன் நடத்தி இருக்கின்றனர்.

தேர்தல் கணக்குகளில் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் போடும் கணக்கு சரியாகவே இருந்திருக்கிறது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய தேர்தல் நட்பு, 2025 வரை நீள்வது ஆச்சர்யமானது என கவனிக்கப்படுகிறது. அது இன்னும் பல தேர்தல்களுக்கும் நீடிக்க வேண்டும். ஏனென்றால் இன்று பாஜக என்கிற மக்கள் விரோத கட்சி இந்திய ஜனநாயகத்தின் பேராபத்தாக மாறியுள்ளது. அதை அப்புறப்படுத்த உருவானதுதான் இந்தியா கூட்டணி.

கலைஞர் உருவாக்கிய கூட்டணி

தேசிய அரசியலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, தொலைநோக்குச் சிற்பியாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய கூட்டணியாக காங்கிரஸ் உடனான நட்பு உள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரியான கலைஞர் அவர்கள், திமுக- காங்கிரஸ் நட்பை சாதாரணமாக உருவாக்கவில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை காக்கும், தேசிய தலைமையையாக காங்கிரஸ் இருக்கும் என்பதே அவர் உருவாக்கியதன் நோக்கம். நட்பு கொண்டிருந்ததன் நோக்கம். இன்றைய இந்தியாவின் தேவை அதுதான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் , கலைஞரைப் போலவே அரசியல் சாதுர்யம் மிக்கவர். இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். காங்கிரஸ் கட்சியுடன் உறுதியான தோழமையாக தலைவர்கள் சோனியா காந்தி அவர்களோடும், ராகுல் காந்தி அவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் பேரியக்கமும் திமுகவும் ஒருமித்த குரலில் நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை கவனப்படுத்துகின்றன. ’ தமிழ்நாட்டை நீங்கள் வெல்ல முடியாது ‘ என ராகுல் அவர்களின் குரல் நம் திராவிட அரசியல் மீது கொண்டுள்ள புரிதல் இல்லாமல் வேறென்ன ?

முதலமைச்சராக அவரது பணிகள் ஆக்கபூர்வமானது. எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றவல்லவை. பொருளாதார அறிஞர்களின் ஆலோசனைகளை கேட்டு ஆட்சி நடத்துவது அரிதிலும் அரிது. இவையெல்லாம் அவரது நிர்வாக திறனுக்கு சான்றாக உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும், கல்வி மேம்பாட்டுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.


கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி, இந்திய அளவில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவையெல்லாம் மக்கள் மத்தியில் ஸ்டாலின் ஆட்சியே தொடரட்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இந்த நேரத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தின் பெயரால் பாசிச சக்திகளுக்கு இடமளிக்கும் வகையில் சிலர் பேசுவது பொருட்படுத்தத் தக்கது அல்ல என்பதே என் கருத்து.

மக்களின் நலன் சார்ந்து கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரே குரலாக ஒலித்து வருகிறது திமுக. அந்தக் குரல் 2026 தேர்தலிலும் சேர்ந்து ஒலிக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு

பத்திரிகையாளர், எழுத்தாளர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share