திட்டக்குடி திமுக நகராட்சி சேர்மனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் உட்பட 12 பேர் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நகராட்சி சேர்மனாக இருப்பவர் வெண்ணிலா கோதண்டம். இப்பதவி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது. துணைத் தலைவராக இருப்பவர் திமுக நகர செயலாளரான பரமகுரு.
நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள். இதில் திமுக 12, அதிமுக 5 மற்றும் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் உள்ளனர்.
இங்கு ஆரம்பத்தில் இருந்தே சேர்மன் வெண்ணிலாவை டம்மியாகவே அதிகாரிகளும் துணைத் தலைவரும் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்த நகராட்சியில் சேர்மனுக்கு ஸ்கார்பியோ காரும், இன்ஜினியர் மற்றும் கமிஷனுருக்கு தலா ஒரு பொலிரோ காரும் உள்ளது. சேர்மன் காருக்கு மாதம் 150 லிட்டர், இன்ஜினியர் மற்றும் கமிஷனர் கார்களுக்கு தலா 125 லிட்டர் என மூன்று கார்களுக்கும் மொத்தம் 400 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேர்மன் வெண்ணிலா, சமீபத்தில் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு அரசுக் காரை எடுத்துச் சென்றாக குற்றஞ்சாட்டி, தற்காலிக ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து, காரை பறிமுதல் செய்துள்ளனர் அதிகாரிகள்.
இதை கண்டித்து 2 நாட்களுக்கு முன்பு சேர்மன் வெண்ணிலாவும் அவருக்கு ஆதரவாக சில கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். எனினும் அதிகாரிகள் தலையிட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் 12 பேர் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்டக்குடி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
அதன் நகலை முதல்வர், துணை முதல்வர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோருக்கும் தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில், “திட்டக்குடி நகராட்சியில் நகர மன்ற தலைவராக இருந்து வரும் வெண்ணிலா கோதண்டம் தலைவருக்கான பணிகளை சரிவர மேற்கொள்வது இல்லை, மாதாந்திர நகர மன்ற கூட்டத்தை சரிவர நடத்த தவறிவிட்டார், நகர மன்ற உறுப்பினர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வதில்லை, டெண்டர் விடுதல் தொடர்பான பணிகளை ஆலோசிக்காமலே தன்னிச்சையாக செய்து வருகிறார், நகராட்சியின் பணிகளை பினாமிகள் பெயரில் செய்து வருகிறார், சமூக நல்லிணக்கம் இல்லாமல் அலுவலகத்தில் ஜாதி வெறியோடு கோஷ்டி சேர்த்து செயல்பட்டு வருகிறார்” என இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேர்மன் வெண்ணிலாவை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த அலுவலகத்தில் என்னை சேர்மனாக யாரும் மதிப்பதில்லை. கையெழுத்து கேட்டால் மட்டும் அதை போட்டு கொடுத்துவிட வேண்டும். நான் ஏன் என்று கேட்டால் ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ என ஒருமையில் பேசுவார்கள்.
நான் முப்பெரும் விழாவுக்கு வண்டியை எடுத்து சென்றதாக கூறி தற்காலிக ஓட்டுநர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து விட்டு, நான் பயன்படுத்தி வந்த காரையும் திரும்ப பெற்றுக்கொண்டனர்.
நான் போனதாகவே இருக்கட்டும், கமிஷனர் முரளிதரன் இதே அரசுக் காரை எத்தனையோ முறை தனது சொந்த ஊரான செஞ்சிக்கும், சொந்த வேளையாக துளுதூர் மற்றும் கடலூர் என சென்றுள்ளார். அப்போதெல்லாம் விதியை மீறியதாக ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்தார்களா? காரை பறிமுதல் செய்தார்களா?
எம்.இ என்கிற முனிசிபாலிட்டி இன்ஜினியரும் பலமுறை காரை தனது சொந்த பயன்பாட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அலுவலத்திலேயே மதுவாங்கி குடிப்பார் என அனைவருக்கும் தெரியும். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்தார்களா? சஸ்பெண்ட் செய்தார்களா?
மாதத்திற்கு 3 கார்களுக்கு மட்டும் 400 லிட்டர் டீசல் போடப்படுகிறது. அதே போல, 3 கார், ஒரு ஜேசிபி, ஒரு லாரி, ஒரு ஜெனரேட்டர் போன்றவைகளுக்கு என ஆண்டுக்கு ரூ.14,40,000 செலவு செய்யப்படுகிறது.
நகராட்சி பகுதியில் 4 ஆண்டில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு வேலை நடைபெற்றுள்ளது. ஆனால் 5 லட்சம் கூட நான் சம்பாதிக்கவில்லை. சம்பாதித்தது எல்லாம் அதிகாரிகளும் நகர் மன்ற துணைத் தலைவரும் தான்.
ஆண்டுக்கு பொதுநிதி என்று 60 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. அதில் நகராட்சி பகுதிகளில் பைப் லைன் போட மட்டும் 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பல்பு, டியூப் லைட் போடுவதற்கு என 9 லட்சம் வாங்குறாங்க.
ஆனால் நான் இவைகளுக்கு கையெழுத்து போடுவது தவிர வேறு ஒன்றும் நான் சம்பாதிக்கவில்லை. நான் செய்த வேலையை பார்த்து எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து சுடுகாட்டு கொட்டகை கட்ட ரூ.10 லட்சமும், அங்கன்வாடி கட்டடம் கட்ட ரூ.16 லட்சமும் வழங்கினார்கள்.
மற்ற எந்த வேலையும் நான் செய்யவில்லை. வேறு எந்தவேலையும் எனக்கு தெரியாது. அதிகாரிகளும், துணை தலைவரும் கொள்ளையடிச்சது இல்லாமல், என்னை அசிங்கப்படுத்தி, எனக்கு கொடுத்த காரை பிடுங்கிக் கொள்வார்களா? எந்த விசாரணை வேண்டுமானாலும் வரட்டும், என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும்” என தனது ஆதங்கத்தை கொட்டினார் வெண்ணிலா.
அவரைத் தொடர்ந்து நகர்மன்ற துணை தலைவர் பரமகுருவை தொடர்புகொண்டு வெண்ணிலாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர், “நாம் அரசியல் ரீதியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அடுத்தவர்கள் குறை சொல்வதால் எனக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. அப்படியே சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வந்தவன் இல்லை. முழுக்க முழுக்க பொதுச்சேவை செய்ய வந்தவன். வெண்ணிலாவை சேர்மனாக நான் தான் பரிந்துரை செய்தேன். அப்படிப்பட்டவரே என்னை குறை சொல்கிறார் என்றால் சொல்லிட்டு போகட்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கமிஷனர் முரளிதரனை தொடர்பு கொண்டு பேச பலமுறை முயற்சித்தும் அவர் போனை எடுக்கவே இல்லை.