தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவையில் 77-ஆவது வார்டு கவுன்சிலர் தனது குடும்பத்துடன் அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என களத்தில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து 150 அதிமுக வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில் நேற்று ஆளும் திமுக கவுன்சிலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கோவை மாநகராட்சி 77-ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் நேற்று (மார்ச் 28) இரவு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.நேற்று தனது குடும்பத்துடன் சென்னை சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஏற்பாட்டின் பேரில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளதாகப் பார்க்கப்படும் கோவை மாவட்டத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் காய் நகர்த்தி வரும் நிலையில், ஆளும் கட்சி கவுன்சிலர் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்திருப்பது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
