டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று சந்தித்து பேசினார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு, கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், ஆட்சியில் பங்கு- அதிகமான தொகுதிகள் என கேட்டு வருகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தந்த ராகுல் காந்தியிடம் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மூலமாக இதனைத் தெரிவித்து இருந்தார் ஸ்டாலின்.
இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியான நிலை உருவானது.
இதனையடுத்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து அவர்களது கருத்துகளை One to One ஆக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் கேட்டறிந்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று அளித்த பேட்டியில், “முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து காத்திருக்கிறோம்.. இன்னமும் கூட்டணி தொடர்பாக திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என கூறியிருந்தார்.
இன்னொரு பக்கம், தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு திமுகவின் MLA தளபதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸை விமர்சித்தனர். இதனையடுத்து “கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது” என திமுகவினருக்கு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தல் விடுத்தது.
இந்த சூழலில் டெல்லியில் இன்று ஜனவரி 28-ந் தேதி ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கனிமொழி சந்தித்து பேசினார். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியான நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில் ராகுல் காந்தியுடனான கனிமொழியின் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
