தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ஆளும் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஐந்தாவது நாளாக இன்று (மார்ச் 22, 2026) நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில், முதலமைச்சருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்று நேர்காணலை நடத்தி வருகிறது.
இன்று காலை அமர்வில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. பிற்பகல் அமர்வில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கான நேர்காணல் தொடரும்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளையுடன் (மார்ச் 23) விருப்பமனு அளித்தவர்களிடமான நேர்காணல் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு சில தினங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் நிறைவடையும் பட்சத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
