2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளைத் திமுக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று (மார்ச் 17) முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர். மார்ச் 17 முதல் மார்ச் 22-ம் தேதி வரை மாவட்ட வாரியாக இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இறுதி நாளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெறும்.
நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் “மக்களுக்கு பிடித்தவர்களுக்கு “ மட்டுமே இம்முறை சீட். வெற்றிவாய்ப்புள்ள உறுதியாய் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட். தான் மட்டுமின்றி பிறரையும் வெற்றி பெற வைத்து கழகத்தின் மாபெரும் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்கு பிறகு தேடி வரும் என கறாராக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் போட்டியிட 15,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், இந்த நேர்காணல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
