அவிநாசி தனி தொகுதியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளம் பெண் மருத்துவரை திமுக வேட்பாளராக அறிவித்து உள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) 2026 தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக போட்டியிடும் 164 இடங்களில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 125 பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் மருத்துவர்கள் 15 பேருக்கும், பொறியாளர்கள் 17 பேருக்கும், வழக்கறிஞர்கள் 29 பேருக்கும், முனைவர்கள் 7 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 18 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவிநாசி தனி தொகுதியில் இந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் மருத்துவர் வெ.கோகிலாமணியை திமுக வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
கோகிலாமணி மருத்துவப் படிப்பை முடித்து மூன்று ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி, பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவிநாசி வட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த சமையலர் பாப்பாள் சமைத்த மதிய உணவை பிற சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் தீண்டாமை செயலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தற்போது அந்த சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மருத்துவரை திமுக வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அவிநாசி தனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் அவிநாசி தனி தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திமுக 28 வயது இளம் பெண் மருத்துவரை களமிறக்கியுள்ளது.
