டிஜிட்டல் திண்ணை: குமுறும் கூட்டணி கட்சிகள்- ‘திகில்’ முடிவு சொல்லும் திமுக.. ‘சம்பவம்’ வெயிட்டிங்!

Published On:

| By Minnambalam Desk

DMK announces important decision

வைஃபை ஆன் செய்ததும், ‘சிஎம் ஸ்டாலின் வீட்டில் வித்தியாசமான ஒரு அணிவகுப்பு நடந்துள்ளதே’ என சொல்லியபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ஆமாம்.. கலைஞர் காலத்தில் இல்லாத ஒன்றாக, முதல்வர் ஸ்டாலின் திருமண நாளை (இன்று -ஆகஸ்ட் 20) முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 19) திமுகவின் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரு சேர திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த போட்டோதான் இப்போ ரொம்பவே கவனம் பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த அணிவகுப்பின் பின்னணி என்ன?

திமுக கூட்டணியில் பிளவு வரப் போகிறது.. அந்த கட்சி.. இந்த கட்சி வெளியேறப் போகிறது என சகட்டுமேனிக்கு அவ்வப்போது செய்திகள் கிளப்பிவிடப்படுகின்றன.

ADVERTISEMENT

அப்போதெல்லாம் திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாகத்தான் இருக்கிறது என பதில் தரப்பட்டது. இப்படி பேசிக் கொண்டே பதில் தருவதை விட கூட்டணி ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்ட வேண்டும் என நினைத்துதான் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பை முன்னெடுத்தவர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் ரொம்பவே பிஸியாக பம்பரமாக சுழன்று கொண்டிருந்த போதும், அனைவரையும் சென்னைக்கு கட்டாயம் வரவேண்டும் என அழைத்திருக்கிறார் எ.வ.வேலு. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ‘சூழலை’ உணர்ந்து ‘ஒற்றுமை அணிவகுப்பில்’ பங்கேற்றனர்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் அப்ப எந்த பிரச்சனையுமே இல்லையா?

திமுக கூட்டணி “கொள்கை அடிப்படையிலான கூட்டணி” என முதல்வர் ஸ்டாலினும் இதர கட்சிகளின் தலைவர்களும் இடைவிடாமல் பேசி வந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் ‘உள்ளுக்குள் ஓராயிரம் புகைச்சல்’ இருக்கத்தான் செய்கிறது..

ஓஹோ.. கூட்டணி கட்சிகளுக்கு அப்படி என்ன அதிருப்தி?

விசிகவில் இருந்து தொடங்குவோம்..

“அப்பாவுடனான மோதலுக்கு திமுகதான் காரணம்” என தொடர்ந்து அன்புமணி குற்றம்சாட்டி வருகிறார். அவரைப் பொறுத்தவரையில், பாஜக தலைமையிலான கூட்டணியில்தான் இடம் பெற விரும்புகிறார். அதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் ராமதாஸ் தலைமையிலான பாமக, அன்புமணியின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக திமுக கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. இதனால்தான் முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பிய போது அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராமதாஸ். அப்போது, அந்த சந்திப்பை தவிர்க்க நினைத்தார் ஸ்டாலின். இதனால் போனில் மட்டுமே ஸ்டாலினிடம் பேசி நலம் விசாரித்தார் டாக்டர்.

இருந்தாலும், திமுக கூட்டணிக்கு ராமதாஸ் பாமக வரட்டும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். ராமதாஸுடன் இது தொடர்பாக ஜெகத்ரட்சகன் எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ராமதாஸ் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு காரணமாக, திமுக தரப்பில் ஒரு கணக்கு- சொல்லப்படுகிறது.

அது என்ன கணக்கு?

“விசிகவை கைவிடவோ வெளியேற்றவோ திமுக தலைமை நினைக்கவில்லைதான். அதே நேரத்தில்,
நடிகர் விஜய்யின் தவெக-வுக்கு விசிகவின் வாக்குகள் கணிசமாக போகக் கூடும். அப்படியான நிலையில் வட தமிழ்நாட்டில் அந்த வாக்கு இழப்பை சரி செய்ய, பாமக மற்றும் தேமுதிகவின் வாக்குகள் தேவைப்படுகிறது” என்பதுதான் அந்த கணக்கு.

விசிக தரப்போ இதை திட்டவட்டமாக ஏற்க மறுக்கிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய விசிக மூத்த நிர்வாகிகள், “நீங்க வட தமிழ்நாட்டுக்கு வந்து பாருங்க.. விசிகவின் பகுதிகளில் மட்டுமல்ல வன்னியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளிலும் விஜய் கட்சியின் பெயர் பலகைகளை மிக அதிகமாகவே பார்க்க முடியும்.

விசிகவின் வாக்குகள்தான் விஜய்யின் தவெகவுக்கு போகும் என எப்படி சொல்ல முடியும்? பொதுவாகவே முதல் தலைமுறை வாக்காளர்களும், திமுகவுக்கு ஆதரவாக இருக்கிற நடுத்தர குடும்ப பெண்களும் விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டால் என்ன என்கிற மனநிலையில் இருக்கின்றனர்.

அப்படி இருக்கும் போது, விசிகவின் வாக்குகள் மட்டுமே விஜய் கட்சிக்கு போகும் என ஏன் நினைக்க வேண்டும்?

ராமதாஸ் பாமகவின் வாக்குகளை வைத்து சமன் செய்யலாம் என திமுக நினைப்பது ஒர்க் அவுட் ஆகாது. கலைஞர் காலத்திலேயே பாமக+ விசிக இரண்டுமே கூட்டணியில் இருந்தும் அது வெற்றியைத் தரவில்லை. அதனால்தான் ராமதாஸ் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்கிறோம் என அதிருப்தியை கொட்டுகின்றனர்.

இதை மனதில் வைத்துக் கொண்டுதான், அண்மையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாளவன், விசிகவின் வாக்குகள் ‘கொத்து கொத்தாக’ திமுக கூட்டணிக்குதான் கிடைக்கும் என அழுத்தம் திருத்தமாகவே பதிவு செய்திருந்தார்.

அத்துடன், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றி கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொல்லி இருந்ததையும் விசிக தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருத்தம் இருக்கிறதா?

வருத்தம் இல்லாமலா?

சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தமக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் பேசும் போது,” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சிப்பதை விட கூட்டணி கட்சிகளைத்தான் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளைத்தான் வறுத்தெடுக்கிறார்.. விசிகவையும் கடுமையாக தாக்குகிறார். திமுகவின் அடிமைகள் என்றெல்லாம் எங்களை சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்.

இன்னொரு பக்கம், திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சில கருத்துகளை சொல்லிவிட்டாலே போதும்.. திமுகவின் ஐடி விங், PEN டீம் ஆகியவை வரிந்து கட்டிக் கொண்டு எங்களை திட்டித் தீர்த்து விடுகின்றனர். அங்கிட்டு அதிமுகவிடமும் இங்கிட்டு கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவிடமும் நாங்க அடிபடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” என வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, திமுக ஏற்கனவே கொடுத்த 25 சீட்டுகளையாவது அப்படியே கொடுத்தால் போதும் என பதற்றத்தில் இருக்கிறது.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம் என பிரஸ்மீட்டில் சொல்லி இருந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை. இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, “அப்ப காங்கிரஸ் கட்சி தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு தேமுதிகவுக்கு விட்டுக் கொடுக்கும்” என கொக்கி போட்டார்.

இதனால்தான் காங்கிரஸ் ‘தலைகள்’, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துவிடாமல் ஏற்கனவே தந்த 25 தொகுதிகளையாவது கொடுத்தாலே போதும் என தவமிருக்கின்றனர்.

மதிமுகவைப் பொறுத்தவரையில், 12 தொகுதிகள் கேட்போம் என்றெல்லாம் பேசியிருந்தாலும் கூட, திமுக கூட்டணியில்தான் தொடர வேண்டும் என்பதில் உறுதியாகவே நிற்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பண்ருட்டி தொகுதிக்கு பதிலாக நெய்வேலி தொகுதியை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் நெய்வேலி, திமுக வென்ற தொகுதி என்பதால் யோசிக்கிறதாம் திமுக தலைமை. இந்த முறை, நாம் தமிழர் கட்சி போன்ற பிற கட்சிகளில் இருந்து பெரிய அளவில் தமது கட்சியில் இணைந்து வருகின்றனர்..அதனால் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகளை எதிர்பார்க்கிறாராம் வேல்முருகன்.

இத்தனை குமுறல்கள், வேதனைகளை திமுக தலைமை அறிந்திருந்தாலும் எங்கள் வியூகமே ‘வேற லெவல்’ என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

அப்படி என்ன அதிரடி வியூகம்?

2021-ல் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் கள நிலவரம் என்ன என்பது பற்றி சிஎம் ஸ்டாலினுக்கு உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. இதில் திமுக 125 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4; மனிதநேய மக்கள் கட்சி 2; கொங்கு மக்கள் தேசிய கட்சி-1; தமிழக வாழ்வுரிமை கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 18; விசிக 4; சிபிஎம் 2; சிபிஐ 2 இடத்தில் வென்றன.

திமுகவின் கூட்டணி கட்சிகள் மொத்தம் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டில், கூட்டணி கட்சிகள் ஜெயித்த 34-ல் 60% தொகுதிகளில் மக்களிடையே மிக கடுமையான அதிருப்தி இருக்கிறது என சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையிலும் வேறு சில ரிப்போர்ட்டுகளையும் வைத்து, இப்படி அதிருப்தி நிலவுகிற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை கொடுக்காமல் மாற்றி கொடுக்கலாம் அல்லது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையையே குறைத்துவிடலாம் என்பதுதான் திமுகவின் வியூகமாம். நிச்சயம், திமுகவின் இந்த முடிவு, கூட்டணி கட்சிகளுக்கு திகிலடிக்கத்தான் போகிறது.

ஏற்கனவே ஏக ‘புகைச்சலில்’ இருக்கும் கூட்டணி கட்சிகள் இதை ஏற்குமா? எதிர்க்குமா? என்பதில்தான் தேர்தல் களத்தின் கிளைமாக்ஸ் இருக்கிறது” என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share