மதுரை மாநகராட்சியை ‘குப்பை மாநகரம்’ என விமர்சித்ததாக சிபிஎம் கட்சியின் எம்.பி. சு. வெங்கடேசனுக்கு (DMK Ally CPM Su Venkatesan) திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கடந்த ஜூன் 19-ந் தேதி தமது சமூக வலைதளப் பக்கத்தில் மதுரை மாநகராட்சி குறித்து எழுதி இருந்தார்.


சு.வெங்கடேசன் கருத்து என்ன?
மதுரை மாநகராட்சி குறித்த சு.வெங்கடேசன் எம்பி பதிவில்,
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்தான அறிக்கையானது குப்பைகளை வீட்டுக்கு வீடு சேகரித்தல், குப்பைகளை வகைப்பிரித்தல், குப்பை மேடுகளை மறுசீரமைத்தல், நீர்நிலைகள், சந்தைகள், பொதுக் கழிப்பிடங்களின் தூய்மை ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை நகரம் கடைசி இடமான 40வது இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை நகரத்தைப் பொருத்தவரையில் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்படுவது 37%, குப்பை வகைப்பிரித்தல் 26%, உருவாக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து கையாளும் திறன் வெறும் 4%, குப்பை மேடுகளை மறுசீரமைத்தல் 25% என்கிற அடிப்படையில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
அதேநேரம் குடியிருப்புகள், சந்தைகள், நீர்நிலைகளின் தூய்மை எனும் பிரிவுகளில் 100% பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையின்றி இருப்பதை 3% மதிப்பெண் பெற்றதை வைத்து அறிய முடிகிறது.
மாநில அளவிலும் கணக்கெடுக்கப்பட்ட 651 நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை 543வது இடத்தையேப் பெற்றுள்ளது.
இக்கணக்கெடுப்பின் நெறிமுறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மதுரை நகரத்தின் தூய்மை மிக மோசமாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்திற்காக மக்கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரத்தை உளப்பூர்வமாக நேசித்து பணியாற்றும் உள்ளமும், திறனும் முக்கியமானது.
இந்த புள்ளிவிபரம் வெளிவந்த பின்னணியிலாவது மதுரை மாநகராட்சி விழிப்புற்று செயல்பட வேண்டும். தங்களின் நடைமுறைகளை சுயபரிசோதனை செய்து கொண்டு உரிய நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். மாநில நகராட்சித்துறை அமைச்சர் முன்னிலையில் மதுரை சார் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். இப்பிரச்சனையை விவாதிக்க மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என எழுதி இருந்தார்.
திமுகவினர் ரத்தம், வியர்வையால் எம்பியான சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன் எம்பியின் இந்த அறிக்கைதான் இப்போது பெரும் சர்ச்சையாகிவிட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று ஜூலை 29-ந் தேதி நடைபெற்றது. இதில் பேசிய திமுகவின் கவுன்சிலர்கள் குழுவின் தலைவர் ஜெயராமன், கீழடி ஆய்வு அறிக்கையையே மத்திய அரசு மதிக்கவில்லை.. அப்படிப்பட்ட மத்திய அரசு தரக் கூடிய ஒரு அறிக்கையை நாம் ஏன் மதிக்க வேண்டும்? சித்திரைத் திருவிழா, திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளைத்தானே மதுரை மாநகராட்சி செய்திருந்தது. ஏன் சிபிஎம் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கும் கூட மதுரை மாநகராட்சி சிறப்பான ஒத்துழைப்பைத்தானே கொடுத்தது.. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவின் மதுரை மாநகராட்சியை சிபிஎம் எம்பி வெங்கடேசன் விமர்சிப்பது எப்படி சரி? திமுகவினர் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்ததால்தான் சு.வெங்கடேசன் எம்பியாக டெல்லி செல்கிறார். பாஜகவை எதிர்த்து பேசுவதைத்தவிர மதுரை மக்களின் பிரச்சனைக்கு ஒருநாளாவது சு.வெங்கடேசன் எம்பி பேசியிருப்பாரா? என ஆவேசப்பட்டார்.
இதனை மறுத்த சிபிஎம் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், எம்பி சு.வெங்கடேசன் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் காட்ட வேண்டாம்.. அவரது அறிக்கையை திரிக்க வேண்டாம் என்றார்.

அது எப்படி விமர்சனம் செய்யலாம்?
அப்போது குறுக்கிட்ட மேயர் இந்திராணி (திமுக), சு.வெங்கடேசன் எம்பி மீது எங்களுக்கும் மரியாதை இருக்கிறது. மதுரை மாநகராட்சியை அவர் விமர்சனம் செய்ததைத்தான் எங்களால் ஏற்க முடியவில்லை. இந்த மாமன்றத்தின் அதிகாரிகள், தூய்மை பணியாளர்களின் உழைப்பு, சு.வெங்கடேசனுக்கு தெரியாமல் போனது வருத்தம்தான் என்றார்.
சிபிஎம் கவுன்சிலர்கள் விஜயா, குமரவேல் ஆகியோர், அதிமுகவுக்கு எதிராக பேசத்தான் நாங்கள் வந்தோம்.. இப்போ திமுகவுக்கு எதிராக எங்களை பேச வைக்கிறீர்களே என்றனர்.
2 சீட்டுக்காக உழைத்த இடதுசாரிகள்
அத்துடன் சிஎபிம் கவுன்சிலர் குமரவேல், திமுகவினரின் ரத்தம், வியர்வை சிந்தி உழைத்ததாக ஜெயராமன் சொல்கிறார்.. நீங்க கொடுத்த 2 சீட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் திமுக வெற்றிக்காக உழைத்தது நாங்கள். இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் கூட்டணி இருந்தால்தான் திமுகவால் ஆட்சியையே பிடிக்க முடியும்.. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்றார்.

சிபிஎம்-க்கு எதிராக திமுக முழக்கம்
இதனைத் தொடர்ந்து சிபிஎம் கவுன்சிலர்கள் இருக்கை அருகே நின்ற திமுக கவுன்சிலர்கள், சு.வெங்கடேசன் எம்பிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.