மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் துணை போன அதிமுகவை கண்டித்து சென்னையில் நாளை பிப்ரவரி 12-ந் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் பிப்ரவரி 22-ந் தேதி முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பான அறிவிப்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து – தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் திமுக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழிலாளர் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து 12.2.2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் நடத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து,
வருகிற 12.02.2026 வியாழக்கிழமை மாலை 4.00 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
