தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9ம் தேதி கடலூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரேமலதா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது ஆரத்தி எடுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பட்டுப் புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதேபோன்று மாநிலம் முழுவதும் விஜயகாந்தின் பிறந்தநாளை தேமுதிக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தேமுதிக மாநில மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமை கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு கடலூர் மாவட்டம சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே பாசார் கிராமத்தில் உள்ள பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் திடலில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.