வைஃபை ஆன் செய்ததும், “இனிமேல எங்க ஆட்டம்னு” களமிறங்கிட்டாங்கப்பா என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
எந்த கட்சியை பற்றி சொல்றீரு?
தேமுதிகதான்.. தேர்தல் நெருங்கிவிட்டதால தேமுதிகவும் ஜெகஜோதியாக களமிறங்கி இருக்கு…
ஓஹோ..
‘இல்லம் தேடி.. உள்ளம் நாடி’ன்னு பிரேமலதா நடத்துற பிரசார பயணம் 3-ம் கட்டமாக மதுரையில தொடங்கியிருக்கு..
அடுத்த மாசம் டிசம்பர் 28-ல் விஜயகாந்த் குருபூஜை, ஜனவரி 9-ல் கடலூர் மாநாடுன்னு மாஸ் காட்ட தேமுதிகவும் ரெடியாகிட்டு இருக்கு..
மதுரையில பிரேமலதா அமைச்சரவை பற்றி எல்லாம் பேசியிருக்காங்களாமே..
ஆமாய்யா.. மதுரையில பேசுன பிரேமலதா, “நாங்களும் பூத் கமிட்டி போட்டுட்டோம்.. நாங்க இருக்கிற கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.. நாங்களும் அமைச்சரவையில் இடம் பெறுவோம்” என ரொம்பவே நம்பிக்கையா சொன்னாரு..
அப்ப கூட்டணி எல்லாம் முடிவாகிடுச்சா?
அதெல்லாம் இன்னும் பேச்சுவார்த்தை லெவலில்தான் இருக்கு.. விஜயகாந்த் குடும்பத்தைச் சேர்ந்தவங்ககிட்ட நாம பேசுனப்ப, “திமுக, அதிமுக ரெண்டு தரப்புலயும்தான் பேசிகிட்டு இருக்கோம்.. திமுக கிட்ட 15 சீட்டும் 2 ராஜ்யசபா சீட்டும் கேட்டிருக்கோம்.. அதே மாதிரி தொகுதிக்கு ரூ. 20 கோடி செலவு செய்ய வேண்டியதிருக்கும்னு சொல்லி இருக்கிறோம்..
அதிமுககிட்டயும் 15 முதல் 20 சீட்டும் ராஜ்யசபா சீட்டும் தேர்தல் செலவுக்கு நிதியும் கேட்டிருக்கிறோம்.. பேசிகிட்டே இருக்காங்க” என்கின்றனர்.
தேமுதிகவின் இந்த மூவ் பற்றி திமுக சீனியர் அமைச்சர்களிடம் பேசிய போது, “அவங்க 15 சீட்டும் 2 ராஜ்யசபா சீட்டும் கேட்கிறது உண்மைதான்.. அதுவும் இப்பவே ஒரு ராஜ்யசபா சீட்டும் அடுத்ததாக ஒரு ராஜ்யசபா சீட்டும்னு ஹை டிமாண்ட் செய்யுறாங்க..
ஆனால் 15 சீட்டு எல்லாம் சிஎம் கொடுப்பாருன்னு சொல்ல முடியாது.. அதிகபட்சமாக 9 சீட் கொடுக்க வாய்ப்பிருக்கு..
பாமகவுல அப்பாகிட்ட அதிமுகவும் மகன்கிட்ட பாஜகவும் பேசிகிட்டு இருக்காங்க.. அதனால வட மாவட்டங்களில் தேமுதிக இருந்தா கூட்டணிக்கு பலமா இருக்கும்னு நினைக்கிறோம்..
விருதுநகர் மாதிரி தென்மாவட்டங்களிலும் கூட தேமுதிகவுக்கு வோட் பேங்க் இருக்கு.. கூட்டணிக்கு வந்தா பலம்தான்னு மினிஸ்டர்ஸ் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு சொல்றாங்க.. இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டுதான் பேசிகிட்டிருக்கிறோம்” என்கின்றனர்.
ராஜ்யசபா சீட்டுல ஏன் கண்ணாவே இருக்குது தேமுதிக?
அதுவாய்யா.. என்னதான் திமுககிட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் டெல்லியைப் பொறுத்தவரைக்கும் இனி காங்கிரஸ் ஆட்சி அமைக்காது; மோடிதான்னு உறுதியாக நம்புறாங்க பிரேமலதா..
அதனால எந்த கூட்டணியிலாவது ஒரு ராஜ்யசபா சீட்டு வாங்கிட்டா போதும்.. பின்னாடி ஏதோ ஒரு சூழ்நிலையில மத்திய அமைச்சர் பதவி கிடைச்சா நல்லா இருக்கும்னு ஒரு கால்குலேஷனாம்..
ராஜ்யசபா, மத்திய அமைச்சர் பதவி ரேஞ்சுக்கு யோசிக்கிறவங்க போட்டியிடும் தொகுதிகளையும் பைனல் பண்ணிட்டாங்களா?
அப்படின்னு சொல்ல முடியாது.. ஆனா, விருத்தாசலம் தொகுதியிலேயே போட்டியிடலாம்னு பிரேமலதா நினைக்கிறாராம்.. அது விஜயகாந்த் ஜெயிச்ச தொகுதி.. அதனால ஒர்க் அவுட் ஆகிடும்னு கால்குலேசன் போடுறாராம்.. மகன் விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் ஏரியாவுல ஒரு தொகுதியை யோசிக்கிறாங்க.. மதுரையில நேற்று பேசுனப்ப கூட திருப்பரங்குன்றத்துல
விஜய பிரபாகரன் போட்டியிடுவது பற்றி மேலோட்டமாக சொல்லி இருந்தாங்க.. அடுத்தடுத்த நாட்களில் தேமுதிகவும் ‘தலைப்பு செய்திகளில்’ வரும்னுதான் தெரியுது என சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டி ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
