தேமுதிக யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக – அதிமுக கூட்டணியில் பிற கட்சிகளை இணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது வரை ஜி.கே.வாசன், அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளனர்.
ஆனால் தேமுதிக யாருடன் இணைகிறது? அதிமுகவுடன் செல்கிறதா? திமுகவுடன் செல்கிறதா? தேமுதிக நிலைப்பாடு என்ன? என்று அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் உறுதியாக கூறவில்லை.
இன்று மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “ தேமுதிக இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ளது குறித்து தங்களுக்கு முறையான தகவல் ஏதுமில்லை. அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று கூட எங்களுக்குத் தெரியாது. இந்த நிமிடம் வரை தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
இப்படி இருக்கும் போது மீடியாவுக்கு யார் தவறான செய்திகளை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. கூட்டணி குறித்த இறுதி முடிவை முறைப்படி செய்தியாளர்களை அழைத்து அறிவிப்பேன். 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நான்காம் கட்ட பிரசாரம் செய்ய இருக்கிறோம்” என்று கூறினார்.
டிஆர்பிக்காக தேமுதிக குறித்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், எதையும் நேரடியாகத் தன்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
யாருடன் கூட்டணி என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் வருவதை கூட நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என்றும் குறிப்பிட்டார்.
